கவிஞர் அ.ரமணி தேவி எழுதிய ‘‘தந்தியின் மேல் விழுந்த பூனைக்குட்டி’ ஹைக்கூ நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
Share
கடந்த20ம் திகதி சனிக்கிழமையன்று மாலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்ஸ் தரைத்தளத்திலுள்ள கவிக்கோ அரங்கில் கவிஞர் அ.ரமணி தேவி எழுதிய ‘தந்தியின் மேல் விழுந்த பூனைக்குட்டி’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ஓவியக்கவிஞர் அமுதபாரதி தலைமையேற்றார். ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ் அனைவரையும் வரவேற்றார்.
ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும் கவிஞருமான கவிஞர் அ.ரமணி தேவி எழுதிய ‘தந்தியின் மேல் விழுந்த பூனைக்குட்டி’ எனும் ஹைக்கூ கவிதை நூலை கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட, கவிஞர் ஜெயபாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.
நூலினை வெளியிட்ட ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் பேசும்போது, “தனது வங்கிப் பணி ஓய்வுக்குப் பின்னரும், ஆர்வத்துடன் ஹைக்கூ கவிதைகளை எழுதி, அதனை நூலாகவும் வெளியிட்டுள்ள கவிஞர் அ.ரமணி தேவி, இந்நூலெங்கும் எழுதியுள்ள கவிதைகளைச் சுருக்கமாகவும், அதே நேரத்தில்
செறிவாகவும், ஆழ்ந்த பொருள் பொதிந்ததாகவும் எழுதியுள்ள விதம் பாராட்டும்படி உள்ளது” என்று வாழ்த்தினார்.
நூலைப்பெற்றுக்கொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன் பேசும்போது, “மூன்றே வரிகளில் இருப்பதினாலேயே ஹைக்கூ எழுதுவது எளிது என்று நினைக்கிறார்கள். அது தவறான புரிதலாகும். மூன்றே வரிகளில் காட்சியழகோடும் கவித்துவத்தோடும், இயற்கையையும் சமூகத்தையும் பாடுபொருளாக்கி எழுதுவது என்பது தொடர் பயிற்சியின் விளைவாகத்தான் கைகூடும். தொன்மைமிக்க நம் தமிழ் மொழியில் எம்மொழி கவிதை வடிவத்தையும் எழுத முடியும் என்பதற்கு சான்றே இந்த ஜப்பானிய கவிதை வடிவம். தனது முதல் நூலிலேயே மேற்கோளாகச் சொல்லத்தக்க
பல நல்ல கவிதைகளை கவிஞர் அ.ரமணி தேவி எழுதியுள்ளார்” என்றார்.
நிகழ்வில், கவிஞர்கள் புதுகை ஆதீரா, அன்புத்தோழி ஜெயஸ்ரீ, அனுராதா செளரிராஜன், சா.கா.பாரதி ராஜா, கா.பாபு சசிதரன், க.குணசேகரன், கு.அசோகன், ச.கெளரிசங்கர், திரைப்பட இயக்குநர் என்.குமார், பாடலாசிரியர் சங்கத்தலைவர் தமிழமுதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இங்கு காணப்பெறும் படத்தில் 20ம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற ‘ஹைக்கூ முற்றம்’ 12-ஆம் நிகழ்வில் கவிஞர் அ.ரமணி தேவி எழுதிய ‘தந்தியின் மேல் விழுந்த பூனைக்குட்டி’ ஹைக்கூ நூலை
கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட, கவிஞர் ஜெயபாஸ்கரன் பெற்றுக்கொண்டார். அருகில் நூலாசிரியர் அ.ரமணி தேவி, ஓவியக்கவிஞர் அமுதபாரதி, கவிஞர் மு.முருகேஷ், கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் ஆகியோர் உள்ளனர்.
















