டிரம்ப் 2027-ம் ஆண்டு இந்தியா வருகிறாரென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ கூறினார்
Share
அமெரிக்க அதிபரி டிரம்ப் 2027ம் ஆண்டு இந்தியா வருகை தருவாரென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதத்திற்கும் கூடுதலாக வரி விதிப்பது என்ற முடிவால், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் முயற்சியில் இரு நாடுகளும் உள்ளன. இந்த சூழலில், அடுத்த ஆண்டு அவர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். இதுபற்றி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த பேட்டியின்போது, அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு மிகச்சிறப்பாகவும், வலுவாகவும் உள்ளது என்று நான் கருதுகிறேன். ஜி-7 மாநாட்டின்போது, அதிபர் டிரம்பும், நானும், பிரதமர் மோடியும் மிகச்சிறந்த சந்திப்பை நடத்தினோம். நாங்கள் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகிறோம். அதனை செய்து முடிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகளில் உள்ளோம். மிக விரைவில் மற்றொரு ‘குவாட்’ அமைப்பு கூட்டத்தில் மீண்டும் பங்கேற்க ஆவலாக உள்ளோம். மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் நான் மீண்டும் இந்தியாவுக்கு செல்லவும், அடுத்த ஆண்டின் (2027) தொடக்கத்தில் அதிபரின் இந்திய பயணத்தை ஏற்பாடு செய்யவும் ஆவலாக இருக்கிறேன். அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான பணிகளிலேயே நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இது மிகவும் சாதகமான விஷயமாக அமையும் என்று கருதுகிறேன். பிரதமர் மோடியின் ரசிகன் நான். அவர் உலகளவில் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார். அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாகவும், நட்பு நாடாகவும் இந்தியா உள்ளது. பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் இடையிலான உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. இது ராஜதந்திர ரீதியில் மிகவும் முக்கியமானது என்று மார்கோ ரூபியோ கூறினார். இதன்படி, 2020-ம் ஆண்டுக்கு பின்னர் டிரம்ப் முதன்முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்கிடையே இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறும்போது, இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இன்னும் ஒரு சில விவகாரங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. தற்போது ஒப்பந்தத்தின் வாசகங்களை இறுதி செய்வதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. அடுத்த சில வாரங்கள் அல்லது மாதங்களில் இது நிறைவடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றார்.
இந்தியாவுக்கு டிரம்ப் 2027-ம் ஆண்டு பயணம் மேற்கொள்வார் என செர்ஜியோ கோரும் உறுதிப்படுத்தி உள்ளார். எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்பத்தில் உறவை ஆழப்படுத்த இரு நாடுகளும் ஆர்வத்துடன் உள்ளன என்றும் அவர் கூறினார்.















