LOADING

Type to search

இந்திய அரசியல்

காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பலமான இயக்கமாக மாற்றுவதே இலட்சியமென மாணிக்கம் தாகூர் கூறினார்

Share

காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக பலமான இயக்கமாக மாற்றுவதே எனது ஒரே இலட்சியமென மாணிக்கம் தாகூர் கூறினார். தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நாளை அவர் புதிய தலைவராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் பலமான இயக்கமாக மாற்றுவதே தனது இலட்சியம் என மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது; ”காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இது மிக முக்கியமான தருணமாகும். 59 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக ஆட்சியில் பங்கு வகிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் த.வெ.க.-காங்கிரஸ் கூட்டணி தொடரும். தேர்தல் அறிவிப்பு வரும்போது கூட்டணி இடங்கள் குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழக வெற்றி கழக கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கு வகிப்பதால், எங்கள் மீதான பொறுப்பு கூடியுள்ளது. தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நல்லாட்சியை வழங்குவதும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறுவதை உறுதி செய்வதும் எங்களது முதன்மை இலக்குகள். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்பது மிக முக்கியமான மற்றும் பொறுப்புமிக்க பணியாகும். பெரும் தலைவர்கள் அலங்கரித்த இந்த பொறுப்பை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என்று கருதுகிறேன். தற்போது கிடைத்துள்ள அமைச்சரவை வாய்ப்பைப் பயன்படுத்தி, 2 அமைச்சர்களின் துணையுடன் கட்சி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் காங்கிரஸ் கட்சியை மாநில அளவில் மிக பலமான இயக்கமாக மாற்றுவதே எனது ஒரே இலட்சியம்.”

இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறினார்.