அமெரிக்கா மீண்டும் போர் தொடுத்தால் ஈரான் இனி இருக்காதென டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது
Share
அமெரிக்கா மீண்டும் போர் தொடுத்தால் ஈரான் இனி இருக்காதென டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்ட நிலையில், இறுதி ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தை சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்தது.இதற்கிடையே அமெரிக்கா-ஈரான் மீண்டும் பரஸ்பர மோதல் ஏற்பட்டு உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற சிங்கப்பூர் கப்பலை ஈரான் தாக்கியது. இதற்கு பதிலடியாக ஈரான் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈரான் மீண்டும் இறங்கியது. குவைத்தில் உள்ள அலி அல் சலேம் விமானப்படைத் தளம் மற்றும் பக்ரைனில் உள்ள சல்மான் துறைமுகத்தில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாம் கடற்படைத் தலைமையகத்தை குறிவைத்து ஏவுகணை, டிரோன்கள் வீசப்பட்டன. அவற்றைத் தடுக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டன. இதில் ஏவுகணைகள், டிரோன்கள் இடைமறிக்கப்பட்டன. மேலும், குவைத், பக்ரைனில் அபாய ஒலிகள் எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து இருக்கிறது. இதற்கிடையே, டிரம்ப் ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் கூறியிருப்பதாவது: போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீறியதற்காக ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான சேமிப்பு இடங்கள், கடலோர ரேடார் தளங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. அவர்கள் ஒருபோதும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது மிகவும் சாத்தியமாக உள்ளது. நாம் இனிமேலும் நியாயமாக இருக்க முடியாத ஒரு நிலை வரலாம். அப்போது நாங்கள் மிகவும் வெற்றிகரமாகத் தொடங்கிய பணியை ராணுவ ரீதியாக முடிக்க நிர்பந்திக்கப்படலாம். அப்படி நடந்தால் ஈரான் என்ற நாடே இல்லாமல் போய்விடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.















