LOADING

Type to search

இலங்கை அரசியல்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அநுரவின் அரசு மீறக் கூடாது !

Share

– தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம்

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக தேசிய மக்கள் சக்தி அரசின் செயற்பாடுகள் அமையக் கூடாது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் 29ம் திகதி அன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் மேலும் கூறுகையில்:-

“தேசிய மக்கள் சக்தி அரசுக்குக் கடந்த தேர்தல்களில் தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர். புதிய அரசு தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தனர். குறிப்பாக, மாகாண சபையின் அதிகாரங்களைப் பலவீனப்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என்பதே அவர்களின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற சில விடயங்கள் மிகவும் நாசுக்கான முறையில் மாகாண சபை அதிகாரங்களைப் பலவீனப்படுத்தும் திட்டத்தோடு அரங்கேற்றப்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒருவகையில் மக்களின் இந்த சந்தேகத்தில் உண்மையும் இருக்கின்றது.

கடந்த கால வரலாறுகளை உற்று நோக்கினால், இவ்வாறு மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசு தன்வசப்படுத்த பல முயற்சிகளை முன்னெடுத்த சூழல்கள் உருவான போதெல்லாம், அன்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் சாணக்கியத்தால் அவற்றை தடுத்து நிறுத்தியிருந்தார். அத்துடன், மாகாண அரசின் ஊடாகவே அத்தகைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க அவர் வழிவகை செய்திருந்தார்.

ஆனால், இன்று அவ்வாறானதொரு வலுவான அரசியல் ஆளுமை தமிழ்த் தரப்பின் மத்தியில் இல்லாதுள்ளமையின் வெளிப்பாடே, மத்திய அரசு மாகாண அதிகாரங்களை நாசுக்காகக் கையில் எடுக்கும் இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளது.” – என்றார்.