LOADING

Type to search

இந்திய அரசியல்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவிற்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி வழங்கியது

Share

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா மக்களுக்கு இந்திய ராணுவம் மருத்துவ சேவைகளை வழங்கியது. நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு, ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ திட்டத்தின் கீழ் இந்தியா அனுப்பியுள்ள இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுலாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது: அனுபவம் வாய்ந்த இந்திய மருத்துவர்கள் அடங்கிய குழு, கராகஸில் உள்ள இன்டர்நேஷனல் லா ரின்கோனாடா ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் மருத்துவ முகாமை அமைத்துள்ளது. இந்த மருத்துவமனை தற்போது 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவ சேவைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் கடந்த வாரம் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இந்த பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1,450 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளனர். நிலநடுக்கத்தால் உருக்குலைந்த வெனிசுலாவிற்கு பல்வேறு நாடுகளும் உதவி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவும் நிவாரண உதவிக்ளை செய்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய ராணுவத்தின் கள மருத்துவமனை மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. இந்திய ராணுவ மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். வெனிசுலா துணை சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தலைநகர் மாவட்ட அரசின் தலைவர் ஆகியோர் இந்திய ராணுவ கள மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டனர் என்று பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் கள மருத்துவமனை வெனிசுலாவை சென்றடைந்துள்ளதாகவும், அந்நாட்டின் நிலநடுக்க நிவாரணப் பணிகளுக்கு அவை பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இந்தியாவின் மனிதாபிமான உதவித் திட்டமான ‘ஆபரேஷன் அமிஸ்டாட்’ மூலம், இந்திய விமானப்படையின் இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் 66 டன் நிவாரணப் பொருட்களை வெனிசுலாவுக்கு கொண்டு சென்றன. இதில், இந்திய ராணுவ கள மருத்துவமனை, 35 டன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவை அடங்கும். டில்லியில் இருந்து கராகஸ் வரை 14 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை சுமார் 23 மணி நேரத்தில் இந்த விமானங்கள் கடந்து சென்றதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் வெனிசுலா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.