LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியா மாதர்பணிக்க மகிழங்குளத்தில் தொடரும் சட்டவிரோத காடழிப்பு

Share

குடிநீர் ஆதாரம் மற்றும் யானைகளின் வாழ்விடத்தைச் சிதைக்கும் கொடூரத்தை தடுத்து நிறுத்துமாறு பொ. ஐங்கரநேசன் கோரிக்கை

வவுனியா ஓமந்தை – பாலமோட்டை வீதியில் அமைந்துள்ள மாதர்பணிக்க மகிழங்குளம் பகுதியில் இதுவரையில் 80 ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட அடர்ந்த காடு தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமான முறையில் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. அரச காணிகளைக் கூறு போட்டு விற்கும் நோக்கில் இடம் பெறும் இந்த வனக் கொள்ளைக்கு வனவளத் திணைக்கள அதிகாரிகளும் துணை போகின்றனர். இது வெறுமனே மரங்களின் அழிவுகள் மட்டுமல்ல் வுனியாவின் குடிநீர் ஆதாரம் மற்றும் யானைகளின் வாழ்விடத்தைச் சிதைக்கும் கொடுரமும் ஆகும். இதன் பாரதூரமான விளைவுகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் உடனடியாக இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாதர்பணிக்க மகிழங்குளத்தில் நடைபெற்று வரும் காடழிப்புக் குறித்து பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வறண்ட வலயமான வவுனியா மாவட்டத்தின் விவசாயமும், குடிநீரும் முற்றிலும் பருவகால மழையையும், அம்மழைநீரைச் சேகரிக்கும் குளங்களையும், நிலத்தடி நீரையும் நம்பியே உள்ளன. மாதர்பணிக்க மகிழங்குளம் போன்ற காட்டுப்பகுதிகள்தான் இயற்கை நீரேந்துப் பகுதிகளாகச் செயற்பட்டு நிலத்தடி நீர்மட்டத்தைப் பேணுகின்றன. தற்போது இப்பகுதியில் 80 ஏக்கர்களுக்கும் மேலாகக் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதால் ஓமந்தை, பாலமோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வரும் காலங்களில் மிக மோசமான குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வன்னி மாவட்டத்தின் உலர்வலயக் காடுகள் அரியவகை மரங்களினதும் வனவிலங்குகளினதும் இயற்கை வாழ்விடமாக உள்ளன. வவுனியாவில் காடுகள் அழிக்கப்படுவதால் அண்மைக்காலமாக வவுனியா – ஹொரவபொத்தானை வீதி மற்றும் ஓமந்தைப் பகுதிகளில் மனித – யானை மோதல்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன. காடுகளை இழந்து உணவுக்கும் நீருக்கும் தவிக்கும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து மக்களின் பயிர்களைச் சேதப்படுத்துவதோடு உயிர்களையும் பலியெடுத்து வருகின்றன. இப்போது இந்த 80 ஏக்கர்களையும் தாண்டி நிகழும் காடழிப்பு அந்தப் பகுதி மக்களின் உயிருக்கும் பயிர்ச் செய்கைக்கும் மென்மேலும் ஆபத்தை விளைவிப்பதாகவே அமைந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் சமீபத்தில்; சுற்றுச்சூழல் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் தேசிய சுற்றுச்சூழல் (திருத்த) சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காடழிப்பு மற்றம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை இந்த அரசு கொண்டுவந்துள்ள சூழலில் அதற்குச் சவால் விடுவது போல் வவுனியாவில் காடழிப்புத் தடையின்றி அரங்கேறி வருகிறது. சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய காடழிப்பை மேற்கொண்டு வருபவர் மீதும் அதற்குத் துணையாக உள்ள வனவளத் திணைக்கள அதிகாரிகள் மீதும் உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.