“இதயம் முரளி” என் மனதுக்கு நெருக்கமான படமென அதர்வா கூறினார்
Share
‘இதயம் முரளி’ படம் என் மனதுக்கு நெருக்கமானது என்று நடிகர் அதர்வா கூறியுள்ளார் . இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா ‘பாணா காத்தாடி, பரதேசி, சண்டிவீரன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து, ஆகாஷ் பாஸ்கரின் இயக்கத்தில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ‘டிராகன்’ படத்தில் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் கயாடு லோஹர் . தற்போது இளைஞர்களின் க்ரஸாகவே கயாடு லோஹர் மாறி உள்ளார். ‘இதயம் முரளி’ படத்தின் மூலம் மீண்டும் நடிகராக களமிறங்குகிறார் தமன். ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு முழுமையாக இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தமன். ஆனால், இதில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் நடித்துள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் ‘பராசக்தி’, ‘இட்லி கடை’ படங்கள் வெளியாயின. அந்தப் படங்களைத் தொடர்ந்து தனது இயக்கத்தில் உருவாகும் ‘இதயம் முரளி’ படத்தினை அவரே தயாரித்துள்ளார். இந்நிலையில், நேற்று ‘இதயம் முரளி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய அதர்வா, “இந்தப் படத்தில் இரண்டு வருடம் பயணித்திருக்கிறோம். பள்ளி மாணவராக நடிக்கையில், பள்ளி மாணவராக மாறினோம், கல்லூரி மாணவராக நடிக்கையில், கல்லூரி மாணவராக மாறினோம். நடித்த அனைவரும் நண்பர்களும் ஆகிவிட்டோம். தமன் பெரிய இடைவெளிக்குப் பின் நடித்திருக்கிறார், அதற்கு நன்றி. பிரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு இருவரும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ‘இதயம் முரளி’ மிகவும் மனதுக்கு நெருக்கமான படம். அதற்கு நான் ஆகாஷுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர், பல படங்களைத் தயாரித்தாலும், அவருக்கு மிகவும் பிடித்தமானது என்ன என எனக்குத் தெரியும். இதில், இத்தனை நடிகர்கள் இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் ஆகாஷ்தான். படத்துக்கு ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் கிடைத்தாலே, சிறப்பான ஒளிப்பதிவு கிடைக்கும். இந்தப் படத்தில் மனோஜ் சார் மற்றும் சாய் என இருவர் கிடைத்திருக்கிறார்கள். இந்தப் படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். குடும்பத்தோடு படத்தைப் பாருங்கள்” என்று கூறியுள்ளார். அதர்வாவிற்கும் ‘இதயம் முரளி’ திரைப்படம் வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வரும் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது.















