போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான 100 வார விழிப்புணர்வு பிரசாரத்தை ஆகஸ்ட் 2-ந்தேதி இந்திய பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
Share
இந்தியாவில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு கவலை அளிப்பதாகவும், இதற்கு எதிராக நாடு முழுவதும் 100 வார விழிப்புணர்வு பிரசாரம் தொடங்க உள்ளதாகவும் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை வரும் ஆகஸ்ட் 2-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
‘நஷா முக்தா யுவா பார் விக்சித் பாரத்’(வளர்ந்த இந்தியாவிற்கான போதைப்பழக்கம் இல்லாத இளைஞர்கள்) என்ற பெயரில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் போதைப்பொருள் இல்லாத இந்தியாவை கட்டியெழுப்ப நாட்டிலுள்ள இளைஞர்களை பிரதமர் மோடி ஊக்குவிப்பார் என்று மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதன் மூலம், போதைப்பொருள் இல்லாத சமூகம் என்ற செய்தியை எடுத்துரைப்பதற்காக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைப்பயணங்கள், விளையாட்டு நடவடிக்கைகள், தியான கூட்டங்கள், தெருவோர நாடகங்கள் மற்றும் கலைப் போட்டிகளை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் 2025 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, நாடு முழுவதும் சுமார் 1.34 லட்சம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1,980 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அதே ஆண்டில், 42,282 ஏக்கர் பரப்பளவிலான சட்டவிரோத ஓபியம் சாகுபடி அழிக்கப்பட்டது. இது 2020-ல் 10,000 ஏக்கராக இருந்தது.















