LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தவறான புரிதல்கள் ஏற்படாதவாறு கவனம் செலுத்துமாறு சுமந்திரன் போன்றவர்களிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி அநுர

Share

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கூட்டணி என்னும் பெயரில் மக்களால் புறக்கணிப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் என்று குறிப்பிட்டப்படுகின்றவர்களில் சிலர் பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் என்பது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்கு தெரிந்திருந்தும் அவர் 03ம் திகதி திங்கட்கிழமையன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் அவர்களைச் சந்தித்தார். அவர்களில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சந்திரகுமார் போன்றவர்களும் அடங்கியிருந்ததை ஊடகவியலளார்கள் ஏளனத்தோடு கவனித்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் குறிப்பிடத்தக்க தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என்று செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

வழமை போல கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து வாய்மொழி மூல உறுதிமொழிகள் சிலவற்றுடன் கூட்டம் முடிவுக்கு வந்தது எனச் சந்திப்பு பற்றிய செய்திகளைச் சேகரித்துள்ள ஊடகவியலாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஆகிய கட்சிகளைச் சார்ந்தவர்களும்ஜனாதிபதியை அவரது செயலகத்தில் சந்தித்துப் பேசினர்.

வழமை போல் புதிய அரசமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.

வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் சொந்தக் காணிகள் அவர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கை நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை என்று கூறிய ஜனாதிபதி, இராணுவத்தின் கைவசம் உள்ள அத்தகைய காணிகளை விடுவிப்பதில் என்ன நெருக்கடி என்பது குறித்து இராணுவத்திடம் தாம் அறிக்கை கோரியிருக்கின்றார் என்றும் அது கிடைத்ததும் அவ்விடயம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

மலையக மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்து அளிப்பதில் சில நெருக்கடிகள் இருக்கின்றன என்று சொன்ன ஜனாதிபதி, மலையகத் தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகள் இவற்றில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருக்கின்றன என்று குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை என்ன முறைமையில் நடத்துவது என்பது தொடர்பில் நிறுவப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முடிவு கிடைத்ததும் தேர்தல் நடத்தப்படும் என்றார் ஜனாதிபதி.

இந்தத் தெரிவுக்குழுவின் செயற்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என்றும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் ஒரே குரலில் தெரிவித்தனர்.

இந்தச் சந்திப்புக் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலக முன்றிலில் வைத்து ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

“தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் குழுவாக ஜனாதிபதியைச் சந்தித்து, அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுகளை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது புதிய அரசமைப்பைக் கொண்டுவருவது தொடர்பான வாக்குறுதிகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, சிறிய தாமதம் ஏற்பட்ட போதிலும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என உறுதியளித்தார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் இதுவரை நடத்தப்படாமை குறித்து கேள்வி எழுப்பியபோது, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தத் தெரிவுக்குழுவின் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும், தேர்தலைத் தள்ளிப்போடுவதற்கே அது பயன்படுத்தப்படுவதாகவும் நாங்கள் சுட்டிக்காட்டினோம்.

இதனையடுத்து, தெரிவுக்குழுவின் தலைவருடன் இது குறித்து நேரடியாக ஆலோசித்து உரிய தீர்வை வழங்குவார் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் இராணுவத்தினராலும் ஏனைய அரசு நிறுவனங்களினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கொள்கை ரீதியாக அந்த நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உடன்பட்டிருந்தாலும், நடைமுறையில் தாமதம் நிலவுவது குறித்துச் சுட்டிக்காட்டப்பட்டது. நிலங்களை விடுவிப்பதில் உள்ள தடைகள் குறித்து இராணுவத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

இவற்றுடன், மலையக மக்களுக்குச் சொந்தமான காணி உரிமை இன்னமும் கிடைக்கப் பெறாத நிலைமை குறித்தும், தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை மீட்டு மக்களுக்கு வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்ட போதிலும், அதற்கான முறையான பதில்களோ தீர்வுகளோ இன்னமும் எட்டப்படவில்லை.” – என்று எம். ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருதல், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்தும் அது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மலையக சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதன்போது விசேடமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும், எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போதைய அரசின் தேர்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அரசமைப்புக்கான முன்மொழிவுகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குறித்த பணியை அவசரமாகச் செய்ய முடியாது எனவும், பல்வேறு சமூகங்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய சமூகப் பரிசீலனையாக அது குறித்துக் கவனம் செலுத்துவது முக்கியம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இது 1948, 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புகளைப் போன்று, ஒரு தரப்பினரால் மாத்திரம் அறிமுகப்படுத்தப்படும் அரசமைப்பாக இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அரசமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதுடன், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார். எனினும், இந்தச் சந்தர்ப்பத்தில் அவசரமாகக் கொண்டுவரப்படும் அரசமைப்புத் திருத்தத்தை விட, புதிய மக்கள் ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதே அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கான கருத்தாடலைத் தொடங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

பல்வேறு சமூகப் பிரிவினரும் தமது தேவைகளுக்காக மாத்திரம் செயற்படுவதைத் தாண்டி, இலங்கையர்களாக ஒன்றிணைந்து செயற்படும் நாட்டை உருவாக்கும் அடித்தளம் தற்போதைய அரசின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலத்தில் நாட்டில் எந்தவொரு இனவாத மோதல்களும் இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக்கூறும் முறையான ஆட்சி முறைமையே தனது எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

எந்தவொரு மக்களும் வசிக்காத மலையகப் பிரதேசங்களில் கூட நில வெடிப்புகள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கேற்ப மத்திய மலையகத்தின் நிலையான தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலேயே அந்த சிக்கலுக்கான தீர்வு காணப்பட வேண்டும் எனவும், அதற்காகத் தற்போது தனி அதிகாரசபையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்தகைய நடவடிக்கைகளின் ஊடாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது அரசின் எதிர்பார்ப்பாகும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

வெவ்வேறு காலப்பகுதிகளில் வெவ்வேறு தேவைகளின் அடிப்படையில் தோட்டக் கம்பனிகளுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், 2042 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன்படி, வெகுவிரைவில் நிறுவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளமையால், மலையக மக்களுக்கு நிலத்துக்கான சட்டபூர்வ உரிமையை வழங்குவது தொடர்பான சரத்துகளை அதில் உள்வாங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீட்டுரிமை கிடைத்த போதிலும், நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களைச் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் அவர்கள் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.

அந்த மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்காக தொண்டமான் அமைப்பையும் நெவிடா அமைப்பையும் இணைத்து புதிய வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு ஏற்கனவே முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை விட அதிகமான தொகையை 2027 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் மத்திய மலைநாட்டில் நிலவும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும், ஆணைக்குழுக்களை நியமிப்பது உள்ளிட்ட அதற்கான பல சாதகமான நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், போரினால் வீடுகளை இழந்த மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வாக, அந்த மக்களுக்கு இரண்டு கட்டங்களின் கீழ் 13 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டங்களில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

டித்வா அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் வரை தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்தப் பணிகள் நிறைவடையும் வரை அந்த மக்களுக்கு வாடகை வீட்டுக் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் முறை மற்றும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பணிகள் குறித்தும் இங்கு உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்ததுடன், தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், மகாவலி அதிகார சபை போன்ற நிறுவனங்கள் பழைய கொள்கைகளின் அடிப்படையில் செயற்படுவதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் முகங்கொடுக்க நேர்ந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் பிரதிநிதிகள் ஜனாதிபதியை தெளிவுபடுத்தினர்.

இந்த அனைத்துக் கருத்துகளையும் கேட்டறிந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் மொழி பேசும் மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு,, சமூகத்தில் தவறான புரிதல்கள் ஏதும் ஏற்படாதவாறு பொதுவாக மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.