LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தில் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறவுள்ள சர்வதேச சைவ மாநாடு!

Share

ந.லோகதயாளன்.

தமிழரின் ஆன்மீக மரபையும் பண்பாட்டு அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சைவ நெறி மற்றும் தமிழ்மொழியைப் பாதுகாக்கும் நோக்கில், எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் 5ம் திகதி புதன்கிழமை அ ன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே ஏற்பாட்டுக் குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்த மாநாடு யாழ்ப்பாணம் நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளது.

நீண்டகால யுத்தம், கட்டாய இடப்பெயர்வு மற்றும் புலம்பெயர்வு காரணமாகச் சமூகத்தின் சமய விழுமியங்களும் வாழ்வியல் பெறுமதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் நோக்குடனும், தற்போதைய சமூகச் சூழலில் அதிகரித்து வரும் நம்பிக்கையின்மை, போதைப்பொருள் பாவனை, ஊழல் மற்றும் பல்வேறு துஷ்பிரயோகங்களிலிருந்து மக்களை மீட்டெடுத்து ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும், பல கோயில்கள் கட்டப்பட்டு வந்தாலும், சைவத்தின் அடிப்படைத் தத்துவங்களும் பண்பாட்டு விழுமியங்களும் இளைய தலைமுறையினரிடையே மங்கிவரும் நிலையைப் போக்கி, உண்மையான ஆன்மீக வாழ்வியலை வலுப்படுத்தி சமூக மறுமலர்ச்சியை உருவாக்கும் நோக்குடனும் இந்தச் சர்வதேச சைவ மாநாடு நடைபெறவுள்ளது என்று ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று குறிப்பிட்ட ஏற்பாட்டுக் குழுவினர், அறிஞர்கள், சமயப் பெரியோர்கள் மற்றும் பல்துறை நிபுணர்கள் தங்களது ஆலோசனைகளையும் ஆசிச் செய்திகளையும் வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதேவேளை, மாநாட்டு ஏற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் நல்லுள்ளங்கள் தாராளமாக நிதியுதவி வழங்கி இந்த முயற்சியில் பங்கெடுக்குமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.