LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் வெளிநாட்டு ஆசைகாட்டி கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக்கோடி ரூபா மோசடி செய்யப்பட்டது!

Share

பு.கஜிந்தன்

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தை சேர்ந்தோரிடம் கடந்த சில வாரங்களுக்குள் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸ் வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து யாழ். மாவட்டத்தில் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே கடந்த சில வாரங்களாக இத்தகைய மோசடிகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக 10 முறைப்பாடுகளும் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதிகபட்சமாக நபரொருவர் ஒன்றரைக் கோடி ரூபாவை இழந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்பியே பெருமளவானோர் பணத்தை இழந்துள்ளனர். கனடா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகவே அந்த விளம்பரங்கள் அமைந்துள்ளன.

எந்தச் செலவும் இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்லலாம்’ என்றவா றாக அமைந்துள்ள விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளுகின்றனர். காலப் போக்கில் மக்களின் நம்பகத்தன்மையைப் பெறும் மோசடியாளர்கள் அவர்களின் வங்கித் தரவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர். அதன் பின்னர் ஒரு தொகைப் பணத்தை வங்கியிலிட்டுக் காட்டுமாறு கூறிவிட்டு கடவுச்சொல்லைத் திருடி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வாறான மோசடியாளர்களிடம் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.