காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏமாற்று நாடகம் இனியும் எமக்கு வேண்டாம்!
Share
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் போராட்டம்
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்(ஓஎம்பி) ஏற்பாட்டில் 25ம் திகதி அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான சர்வதேச தின நிகழ்வை கண்டித்து வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடைபெற்றது.
இதேவேளை சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளமையும் அதில் கலந்து கொள்ள இலங்கையின் பல பகுதிகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் யாழ்ப்பாணம் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.















