LOADING

Type to search

உலக அரசியல்

சீன அதிபர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார்

Share

சீன அதிபர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார். டில்லியில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பயணம் உறுதி செய்யப்பட்டால், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா வருகிறார். செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் ஷி ஜின்பிங் சுமார் 400 அதிகாரிகள் கொண்ட குழுவுடன் பங்கேற்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 2019-ம் ஆண்டு இந்தியா வந்தபோது அவருடன் 200-க்கும் குறைவான அதிகாரிகள் வந்த நிலையில், இந்த முறை அந்த எண்ணிக்கை அதாவது, இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், பிரிக்ஸ் ஒத்துழைப்புக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், நடப்பு தலைமைப் பொறுப்பில் உள்ள இந்தியா இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஜி ஜின்பிங்கின் இந்திய பயணம் குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை என்றும் கூறியுள்ளது. இதற்கிடையே, இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்காக சீனா சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன துணை அதிபர் ஹான் செங்கை சந்தித்துப் பேசியுள்ளார். எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் பரஸ்பர உறவை பேணுவது, இருதரப்பு உறவுகளை பொருளாதாரம், அரசியல் மற்றும் பலதரப்பு தளங்களில் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்களும், 4 சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலம் ராணுவ பதற்றம் இருந்தது. 2024-ம் ஆண்டு அக்டோபரில் எல்லையில் படைவிலகல் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியா-சீனா உறவில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஷி ஜின்பிங்கின் பயணத் திட்டம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் நிகழ்ச்சி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமர் மோடி மற்றும் ஷி ஜின்பிங் சந்தித்தால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் மேம்படுத்துவதற்கான முக்கிய நகர்வாக அது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.