இலங்கையின் தொல்பொருள் திணைக்களத்திற்கு திருகோணமலை மேல் நீ நீதிமன்றத்தின் ‘தடை உத்தரவு’
Share
கிழக்கு மாகாணத்தில் தனியார் காணியொன்றில் அமைந்துள்ள பழைய சிதைவடைந்த சைத்தியம் வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தி, நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
கன்னியா வெந்நீரூற்றுகள் அமைந்துள்ள காணிக்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தில் காணப்படும் பழைய சைத்தியத்தை தற்போதுள்ள நிலையில் பாதுகாப்பதற்குப் பதிலாக அதனை புனரமைப்பதைத் தடுக்கும் வகையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஏ. அப்துல்லா நேற்றைய தினம் (ஒகஸ்ட் 31) பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவு செப்டெம்பர் 22ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமென, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
கன்னியா வெந்நீரூற்றுகளுக்கு அருகில் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படும் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் பழைய சைத்தியத்தை புனரமைப்பதற்காக, ஜூலை 22ஆம் திகதி தொல்பொருள் திணைக்களம் அடிக்கல் நாட்டியிருந்தது.
“இன்று இருக்கும் நிலையிலேயே அதை பராமரிக்க வேண்டும். அதாவது, எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 22ஆம் திகதி வரை அந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்” என சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தொல்பொருள் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி கால அவகாசம் கோரியமை, வழக்கை அடுத்த விசாரணைத் திகதிக்கு ஒத்திவைக்க காரணமாக அமைந்ததாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிள்ளையார் கோவிலும் அதற்கு அருகிலுள்ள பழைய சைத்தியம் அமைந்துள்ள காணியும் பிரதேசவாசி ஒருவருக்குச் சொந்தமான தனியார் காணி எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தனியார் காணியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலை வேறு இடத்தில் நிர்மாணிப்பதற்கும், அந்தக் காணியில் காணப்படும் பழைய சைத்தியத்தை அது தற்போதுள்ள நிலையிலேயே பாதுகாப்பதற்கும் தொல்பொருள் திணைக்களம் முன்னதாக நீதிமன்றத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தது.
தொல்பொருள் பெறுமதி கொண்டதாக அடையாளம் காணப்பட்ட இடமொன்றைப் பாதுகாப்பதற்கு தொல்பொருள் திணைக்களத்திற்கு உரிமை இருப்பதாகவும், அதற்கு அமைய அங்கு இருந்ததாகக் கூறப்படும் பழைய சைத்தியத்தை தற்போதுள்ள நிலையிலேயே பாதுகாப்பதற்கு மாத்திரமே அவர்களுக்கு உரிமை இருப்பதாகவும் H.C.R./RIT/590/2019 வழக்கில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தத் தீர்ப்புக்கு அமைவாக, காணியின் உரிமையாளர் சார்பில் சட்டத்தரணி பிரசாந்தி உதயகுமார் ஊடாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்திற்கு அமைய, நீதிமன்றத்தில் முன்னதாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டுக்கு முரணாக, தனது காணியில் அமைந்துள்ள பழைய சைத்தியத்தை புனரமைப்பதற்காக தொல்பொருள் திணைக்களம் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணியில் அமைந்துள்ள தொல்பொருள் தளத்தைப் பாதுகாப்பதைத் தவிர அதனைப் புனரமைக்க முடியாது என தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையும், முன்னதாக தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் இணங்கிய விடயங்களையும் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தியதாக, முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
“தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ், காணியின் உரிமையாளருக்கும் தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் அங்கு காணப்படும் தொல்பொருள் தளத்தைப் பாதுகாப்பதற்கு உடன்பட முடியும். எங்களுடைய நிலைப்பாடு என்னவென்றால், நீதிமன்றத்தில் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடுதான் அந்த ஒப்பந்தமாகும். தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் 20ஆம் பிரிவின் கீழ் உள்ள ஒப்பந்தத்தில் குறிப்பாக ‘பாதுகாப்பது மாத்திரமே’ என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வேறு எதையும் செய்யக்கூடாது. பாதுகாப்பதை மாத்திரமே செய்ய முடியும். புனரமைக்க முடியாது. பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது. சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வேறு அதிகாரங்களையும் பயன்படுத்த முடியாது. ஏனெனில், அந்த இடத்தை அது இருக்கும் நிலையிலேயே பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மாத்திரமே மேற்கொள்வோம் என அவர்கள் எங்களுடன் நீதிமன்றத்தில் இணங்கியுள்ளனர். அதனால்தான் இந்த விடயத்தை மீண்டும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.”















