செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை கண்டனத்திற்குரியதென பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்
Share
செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கை கண்டனத்திற்குரியதென தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது மக்களின் உயிரைக் காக்கும் மகத்தான பணியில் இரவு பகல் பாராமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் செவிலியர்கள், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஜனநாயக வழியில் போராடியுள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்தில் நம் உயிரை பெரிதும் பொருட்படுத்தாமல், மக்களின் உயிரை காப்பாற்றிய செவிலியர்கள். அவர்களுடைய கோரிக்கையை இந்த அரசு செவி சாய்த்து நிறைவேற்ற வேண்டியது கடமை. பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செவிலியர் பிரதிநிதிகளை மண்டபத்தில் அடைத்து வைத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அவர்களை விடுவிக்கக் கோரி போராடிய செவிலியர்களை இரவு நேரத்தில் காவல்துறையினர் கைது செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும். செவிலியர்களின் குரலை காவல்துறை நடவடிக்கைகளால் அடக்க முயல்வதை விடுத்து, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து அரசு உடனடியாக வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். “சம வேலைக்குச் சம ஊதியம்” உள்ளிட்ட அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் பரிசீலித்து, நியாயமான தீர்வை விரைந்து வழங்க வேண்டும். கைது செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அவர்களது ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளித்து அரசு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். கொரோனா காலத்தில் நம் உயிரைக் காத்த செவிலியர்களின் உரிமைக்குரலை இன்று நாம் காப்பது நமது கடமை என்று தெரிவித்துள்ளார்.















