LOADING

Type to search

சினிமா

“விழியே கதை எழுது” பாடலால் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்த கேஜே யேசுதாஸ்

Share

(இன்று 82-வது பிறந்தநாள்)

தமிழ் சினிமா ரசிகர்கள் நினைவில் காலம் பல கடந்தும் நிலைத்து நிற்கும் பாடல்கள் சில உண்டு. அவற்றில், உரிமைக்குரல் படத்தின் “விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே…”, அந்தமான் காதலியின் நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோயிலே ஓடி வா…” ஆகிய பாடல்களுக்கு நிச்சயம் இடம் உண்டு.

இரண்டுமே ஜோடிப்பாடல்கள் என்றாலும், அதில் ஒலித்த ஆண்குரலின் சொந்தக்காரரான கேஜே யேசுதாசை ஒருபோதும் மறக்கவே முடியாது.

அதோடு, இந்தப்பாடல்களையும் நினைத்துப்பாருங்கள். மனதுக்குள் பரவசம் பொங்கும்.

“செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…” (முள்ளும் மலரும்)

“பூவே செம்பூவே பொன் வாசம் வரும்..” (சொல்லத்துடிக்குது மனசு)

“தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு..” (அவள் ஒரு தொடர்கதை)

“சிட்டுக்கு சின்னச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது..” (நல்லவனுக்கு நல்லவன்)

இதுபோன்று பல பாடல்கள் உண்டு. அந்த கான கந்தர்வ குரலால் நம்மை வசப்படுத்தியவர், யேசுதாஸ்.

கட்டசேரி யோசப் யேசுதாஸ் என்பது அவரது முழுப்பெயர்.

லத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்&அலைசுகுட்டி தம்பதிக்கு மகனாக கொச்சியில் 1940 ஜனவரி 10-ந் தேதி பிறந்தவர், யேசுதாஸ். அவருடைய தந்தை மலையாள செவ்விசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். தொடக்கத்தில் இசைப்பயிற்சியை அவரிடமே கற்ற யேசுதாஸ் பின்னர் திருப்புணித்துறையில் இசை அகாடமியில் இசைக் கல்வியைத் தொடர்ந்தார். சற்றுகாலம் வேச்சூர் அரிகர சுப்பிரமணிய அய்யரிடம் பயின்ற பின்னர் செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மேல்நிலைப் பயிற்சி பெற்றார். இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சி பெற்றார்.

1961 நவம்பர் 14 அன்று யேசுதாஸ் ஜாதி பேதம் மாதா த்வேஷம் என்ற தனது பிரபலமான முதல் பாடலை எம்பி சீனிவாசன் இசையில் பதிவு செய்தார். திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடங்க இவர் பாடிய நான்கு வரிகளையும் ஒரு பெரிய ஆசீர்வாதமாக கருதுகிறார்.

 தமிழ்த் திரைப்படங்களில் எஸ். பாலச்சந்தரின் பொம்மையில் முதன்முதலாக “நீயும் பொம்மை, நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் அறிமுகமானார். ஆனால் முதன்முதலாக வெளியிடப்பட்ட திரைப்படம் வேதாவின் இசையில் கொஞ்சும் குமரி ஆகும்.

தொடர்ந்து பல மொழிப்படங்களில் பல்லாயிரக்கணக்கானப் பாடல்களைப் பாடி பல விருதுகளையும் பெற்றார். 1970 ஆம் ஆண்டில் கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டார்.

தனது 50 ஆண்டு திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி,அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000-க்கும் கூடுதலான திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த திரைப் பின்னணிப் பாடகர் வகையில் வேறு எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில் எட்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார். திரை இசை தவிர,கர்நாடக இசைக் கச்சேரிகள் பல நிகழ்த்தியுள்ளார். சமயப் பாடல்கள், பிற மெல்லிசைப்பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார். மலையாளத் திரைப்படங்களுக்கு இசை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவரை கான கந்தர்வன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

பிறப்பால் கிறிஸ்தவரான யேசுதாஸ், சபரிமலை ஐயப்பனைப் புகழ்ந்து பாடிய ‘அரிவராசணம்…’ பாடல், பக்தர்கள் நெஞ்சில் நித்தமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

பிலிம்பேர் விருதுகள் ஐந்து முறை பெற்றயேசுதாஸ், சிறந்த பின்னணிப் பாடகருக்கான மாநில விருது, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள் கொடுத்த விருதுகளை நாற்பத்து மூன்று முறை பெற்றவர். இவர் கலைகளுக்கு செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசால் இவருக்கு 1975 இல் பத்மஸ்ரீ , 2002 இல் பத்ம பூஷண், 2017 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் (இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருது) வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இசைத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக சிஎன்என்-ஐபிஎன் சிறந்த சாதனை விருதை யேசுதாசுக்கு வழங்கி கௌரவித்தது. 2006 ஆம் ஆண்டில், சென்னையின் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 திரைப்படப் பாடல்களைப் பாடினார். இந்த பாராட்டுகள் மற்றும் அங்கீகாரங்களின் விளைவாக, இவர் இந்திய இசை வரலாற்றில் மிகச் சிறந்த பாடகர்களில் ஒருவராக பரவலாகக் கருதப்படுகிறார்.

யேசுதாஸ் மனைவி பெயர் பிரபா. இவர்களது திருமணம், 1970 பிப்ரவரி 1 அன்று நடந்தது. இவர்களுக்கு வினோத், விஜய், விஷால் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் 2007,2012, 2018 ஆம் ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை வென்ற இசைக்கலைஞர் ஆவார்.

-மணிராஜ்,

திருநெல்வேலி.