தமிழ் சினிமாவில் ‘மஹாகவி’ பாரதி பாடல்கள் – வீணைமைந்தன்
Share
அத்தியாயம் 11
பாரதி நூற்றாண்டு நினைவாக பாரெங்கும் பாரதியின் மந்திரச்சொல் நிறைந்த கவிதைகளையும், எழுத்துக்களையும், வாசகங்களையும், பாரதியினிடத்துப் பக்தியும் காதலும் கொண்ட அறிஞர்கள் பரசவத்தோடு பேசியும், எழுதியும், கொண்டாடியும்
வருவதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்து இன்புற்று வரும் இக்காலத்தில்
அவரது எழுத்தியல் தடயங்கள் என்னிடம் சோர்வை அகற்றுகின்றன, சுறுசுறுப்பை
வளர்க்கிறன, ஆண்மையை வலிமைப்படுத்துகிறது.
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், நான் தமிழின் சொந்தக்காரன், இரத்த
உரித்துக்காரன் என்ற தைரியத்தைச் சோரவிடாமல் காக்கிறது. அவ்வகையில்
கனடாவில் வாழும் ஈழத்துக் கவி அன்பர் ‘பெருங்கவிஞன் பாரதி’ எனும் தலைப்பின்
கீழ் எழுதிய கவிதையிலிருந்து சில வரிகளை வாசகர்களோடு இணைந்து மீண்டும்
இரசிக்க விரும்புகிறேன்! (“பூமழை” கவிதைத்தொகுப்பு).
“……. வில்லேந்தும் சொற்கவிதை வண்ணத்தாலே
விடுதலையூர் சேர்ந்திடற்காய் நீயோ வந்தாய்
முல்லை மணச் சுவையிலே ஐயா மூத்தோர்
முத்தமிழர் குறைதீர்க்கக் கவிதை சொன்னாய்,”
என்றும்,
“சாலையிலே வாடிட்ட முல்லைக் கன்று
சரித்திரத்துப் பாரிதரும் தேரைப் போல
ஆலையிடக் கரும்பாக வாழ்ந்தோர்க் கைய
அருங்கவிதை நீசொரிந்தே உணர்ச்சி ஈந்தாய்”
எனவும்,
“வயல் வெடித்த நிலை கண்டு வானம் பார்க்கும்
உழவர்க்கு மாமழைபோல் எம்முன் வந்தாய்!
புயல்வீசி அழிந்திட்ட பூங்காவிற்குள்
புதுமலர்கள் சிரித்தாற்போல் தனித்தே நின்றாய்”
எனவும்,
கலைஞ நின் கவிதைகளால் தரிசாய்ப் போன
தமிழ்மண்ணும் சிலிர்த்ததடா! காற்றுக் கூட
அலையெறிந்து புயலாகிப் போருக்காக…
ஆர்ப்பரித்து வீசிற்று….”
எனும் வரிகள்
பாரதியிடம் பக்தியும், பாசமும் கொண்டு எழுதிய பாரதிதாசனாரின்
வீறுகொண்ட எழுத்துக்களுக் கூடாக கனடிய ஈழக் கவிஞரகளும் என்னைப்
பேருவகை கொள்ள வைக்கின்றனர்
இனி இவ்வாரம் தமிழ் சினிமாவில் ‘மகாகவி’ பாரதி பாடல்களில் ஒன்றாக
இடம் பெறும் பாடல் கலைஞர். மு. கருணாநிதி ஐயா அவர்களின் கதை வசனத்தோடு
வெளியான (1987) ‘நீதிக்குத் தண்டனை’ படத்தில் இடம் பெற்ற பாடலாகும்.
கலைஞர் மு. கருணாநிதி ஐயாவின் கைவண்ணத்தில் சுமார் 69 படங்கள் வரை
திரைக்கதை அமைத்து, உரையாடல்களும், பல படங்களுக்குப் பாடல்களும்
எழுதியுள்ளார்.
பெண்ணுரிமை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைகளைச் சாடுதல், பகுத்தறிவு,
சமூகநீதி, தேச விடுதலை, தீண்டாமை என பாரதியின் கொள்கைகள், கருத்துக்களை
முன்னிறுத்தி திரைச்சித்திரங்கள் வாயிலாகப் பாடம் சொல்லியிருந்தாலும், ஒரே ஒரு
படமான ‘நீதிக்குத் தண்டனை’ படத்தில் மட்டுமே பாரதி யையாவின் பாடலொன்று
இடம் பெற்றுள்ளது.
பாரதி ஐயாவை விட அவரது தாசனாகத் தன்னை வரித்துக் கொண்ட
‘பாவேந்தர்’ பாரதிதாசன் கவிதை வரிகளை மேற்கோள்காட்டியும், மேடைகளில்
பேசியும் வந்தவர் கலைஞர் மு.க. என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
காளி உபாசகரும், தேவி பராசக்தியின் பக்தருமாகிய ‘மகாகவி’ பாரதி ஐயா
அன்னை பராசக்தியை குழந்தையாகக் கண்டு, பாடியும், எழுதியதுமான ’கண்ணம்மா
என் குழந்தை’ எனும் தலைப்பின் கீழ் ‘சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா’ எனும் 40
வரிகள் கொண்ட பாடலில் 12 வரிகளை மட்டும் தாலாட்டுப் பாடலாக்கி
கே.ஜே.யேசுதாஸ் – செல்வி. சுவர்ணலதா இருவரையும் பாட வைத்து
இசையமைத்திருப்பார் ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள். படத்தில்
நாயகன் ‘நிழல்கள்’ ரவியும் – திருமதி. ராதிகாவும் குழந்தையைத் தாலாட்டும்
பாடலாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இனிமையான பாடலாகும். இதோ
திரைபடத்தில் இடம்பெற்ற பாரதி வரிகள்….
“சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலி தீர்த்தே – உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!
(சின்னஞ்சிறு)
பிள்ளைக் கனியமுதே – கண்ணம்மா
பேசும் பொற் சித்திரமே!
அள்ளி அணைத்திடவே – என் முன்னே
ஆடி வருந்தேனே….!
(சின்னஞ்சிறு)
கன்னத்தில் முத்தமிட்டால் – உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடீ!
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா
உன்மத்தமாகுதடி…!
(சின்னஞ்சிறு)
பாரதி ஐயா எழுதிய பாடல்களில் சிலவற்றைத் திரைப்படங்களில்
காட்சிக்கேற்றார் போல் காட்சிப்படுத்திப் பாட வைத்தது மல்லாமல். முக்கிய
பாத்தரங்களின் குரலில் பேச வைத்த பாடல் வரிகளும் சில படங்களில் இடம்
பெற்றுள்ளன! உதாரணமாக….
நடிப்புச் சுதேசிகளைப் பார்த்துப் பேசுவதாக திரையுலகின் தலைமகன் ஒருவர்
“நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ – கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி….”
எனத் தனது ரௌத்திரத்தை வெளிக்காட்டுவார்!
இக்காட்சி எப்படத்தில் இடம் பெற்றிருந்தது?
காட்சி அடுத்த இதழில்….
– வீணை மைந்தன்













