LOADING

Type to search

சினிமா

தமிழ் சினிமாவில் ‘மகாகவி’ பாரதி பாடல்கள் | வீணை மைந்தன்

Share

அத்தியாயம் 15

“எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி!
மனதிற் சலனமில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திட நீ செயல் வேண்டும்
கனக்குஞ் செல்வம் நூறு வயது
இவையும் தர நீ கடவாயே!

என, பாரதி ஐயா வேண்டுதல் செய்தது போன்று நானும் – ஆயுள் உள்ளவரை அந்த மகாகவியை நெஞ்சில் வைத்துப் பூஜித்து அவர் தம் பெருமையை எழுதிக்கொண்டிருக்க ஆவல் மிகக் கொண்டுள்ளேன்.

தந்தையார் சின்னசாமி ஐயருக்கும் – தாயார் லட்சுமி அம்மாளுக்கும் பிள்ளையாக உதித்த அவதார புருஷரான சுப்பையா என்ற சுப்பிரமணியம் – பின்னாளில் சூடிக்கொண்ட புனைபெயர்களை நினைவூட்ட விரும்புகிறேன்.

காளிதாசன்
சக்திதாசன்
சாவித்திரி
ஓர் உத்தம தேசாபிமானி
நித்திய தீரர்
ஷெல்லிதாசன் (ஆங்கிலப் புலவன் ஷெல்லியிடம் அளவற்ற இலக்கிய காதல் கொண்டவர் மகாகவி யாவார்)

தமிழறிந்த சான்றோர்கள் வழங்கிய சிறப்புப் பெயர்களாவன;

‘புதுக்கவிதையின் முன்னோடி’
‘பைந்தமிழ் தேர்ப்பாகன்’ (பாவேந்தர் வழங்கியது)
‘சிந்துக்கு தந்தை’ (பாவேந்தர்)
‘நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா’ (பாவேந்தர்)
‘காடு கமழும் கற்பூரச் சொற்கோ’ (பாவேந்தர்)
‘பாட்டுக்கொரு புலவன் பாரதி’ கவிமணி
‘தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி’
‘தேசியக்கவி’
‘விடுதலைக்கவி’
‘அமரகவி’
‘முன்னறி புலவன்’
‘மகாகவி’
‘உலககவி’
‘தமிழ்கவி’
‘மக்கள் கவிஞர்’
‘வரகவி’
பாரதி ஐயா பற்றி புதிய தலைமுறை தமிழ் பிள்ளைகள் அறிந்திருக்கவேண்டிய இவற்றைப் பதிவு செய்கிறேன்.
பாரதி ஐயா எழுதிய நாடகம் ‘ஜெகதசித்திரம்’
ஐயா எழுதிய உரைநடை நூல்கள்..
‘ஞானரதம்’ (முதல் உரைநடை காவியம்)
‘தராசு’
‘சந்திரிகையின் கதை மாந்தர்’
அடுத்து வரும் இதழ்களில் வேறு சில புதினங்களை தொடங்குவேன்.

இனி, ‘தமிழ் சினிமாவில் மகாகவி பாரதியின் பாடல்கள் தொடர்ச்சியாக…

‘திக்குத் தெரியாத காட்டில்..” என ஆரம்பிக்கும் பாடல் ‘பானை பிடித்தவள் பாக்கியசாலி’ (1958) படத்தில் இசையமைப்பாளர்கள் எஸ் வி வெங்கட்ராமன் எஸ் வி ராஜேஸ்வரராவ் இருவரினதும் இசை சேர்க்கையில் திருமதி ஜக்கி அம்மாவும், திருச்சி லோகநாதன் பாடியிருந்தார்.

1977 இல் வெளிவந்த “அக்ரகாரத்தில் கழுதை” படத்திற்கு எம்பி ஸ்ரீனிவாசன் பின்னணி இசையில் வசன கவிதையாக.. “தீ எரிக.. என ஆரம்பிக்கும் பாரதியின் வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

1968-இல் வெளிவந்த ‘திருமால் பெருமை’ படத்தில் (நடிகர் திலகம் நடித்தது) கே ஆர் விஜயாவிற்காக ‘திரை இசைத் திலகம்’ கேவி மகாதேவன் இசையில் சூலமங்கலம் ராஜலட்சுமி அவர்களின் இசை குரலில் ‘காக்கை சிறகினிலே… நந்தலாலா..” பாடல் ஒலித்தது.

1980 இல் வெளிவந்த இயக்குனர் கே பாலச்சந்திரனின் ‘வறுமையின் நிறம் சிகப்பு’ படத்தில் பாரதி ஐயா எழுதிய “தீர்த்தக் கரையினிலே.. தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே..” என பாடும் நிலா எஸ்பிபியும், தொடர்ந்து அவரே “நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ…” எனும் பாடல்களும் மெல்லிசை மன்னர் எம்எஸ்வி யின் இசைக்கருவிகளும் இணைந்து எம்மை கிறங்கடித்தன.

1986 இல் வெளியான ‘கண்ணே கனியமுதே’ படத்தில் பாரதி ஐயாவின் ‘நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி..’ எனும் வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் திரு கே ஜே யேசுதாஸ், திருமதி வாணி ஜெயராம் இருவரினதும் இரு குரலிசையில் ஒலித்தது.

அடுத்து, 1987 இல் வெளியான “இனி ஒரு சுதந்திரம்” படத்தில் திரு கங்கை அமரன் இசையில் ஜேசுதாஸ் அவர்கள் குரலில் “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்..” எனும் பாரதி ஐயாவின் தாகத்தை கேட்டு நெகிழ்ந்தோம்; உணர்ச்சியுற்றோம்.

இப்பாடல் வரிகளுடன் கூடிய காட்சியை ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் முன்னமேயே திருச்சி லோகநாதன் அவர்களை பாடவைத்து பிரமாதப் படுத்திருப்பார் சங்கீத மேதை ஜி ராமநாதன் ஐயர்.

கடந்த வார இதழில் குறிப்பிட்டபடி 2000-ம் ஆண்டில் வெளியான பாரதி படம் அவரது வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை ஓரளவு காட்சிப்படுத்தப்பட்ட படமாக தயாரிக்கப்பட்டிருந்தது. கன்னட மொழி நடிகரான ‘சாயாஜி சிண்டே’ என்ற நடிகர் பாரதியாக தோன்றி நடித்திருப்பார். செல்லம்மாளாக திருமதி தேவயானி பாத்திரமேற்று இருந்தார். இந்த வரலாற்றுப் பட முயற்றி பாராட்டுக்குரியது.

‘இசைஞானி’ திரு இளையராஜா அவர்களின் ஆளுமை மிக்க இசைக் கலவைகளோடு பாரதி ஐயாவின் சுமார் எட்டு பாடல்கள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தன.

பாரதி ஐயாவின் மகள் வயிற்றுப் பேரன் ராஜ்குமார் பாரதி அவர்களையும் பாட வைத்திருப்பார் இளையராஜா அவர்கள். “கேளடா மானிட வா..” பாடலை திரு ராஜ்குமார் பாரதி பாடியிருந்தார்.
“நின்னை சரணடைந்தேன்” வரிகளுடன் ஆரம்பிக்கும் பாடலை இளையராஜா – பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோரும், ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ பாடல் வரிகளை கே ஜே யேசுதாஸ்,
‘எதிலும் இங்கு’ என மது பாலகிருஷ்ணனும், அவரே மீண்டும் ‘வந்தே மாதரம்’, எனவும் இரு பாடல்களையும் பாடி இருப்பார்.

‘அக்னி குஞ்சு’ பாடியவர் கே.ஜெ ஜேசுதாஸ்.

ஹரிஸ் ராகவேந்திராவின் “..நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ…” என எத்தனை முறை கேட்டாலும் மெய்மறக்கலாம்..

அடுத்த இதழில் மீண்டும் பாரதி ஐயாவை தரிசனம் செய்வோம்..

வீணை மைந்தன்