இலங்கையில் மக்கள் போராட்டங்கள் ஆட்சியை மாற்றுமா?
Share
திருமலை நவம்
தனக்கும் தன்னுடைய அரசாங்கத்துக்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இடைக்கால அரசொன்றை அமைக்க கட்சி தலைவர்களுக்கும் பாராளுமன்றில் அங்கம் பெறும் அனைத்து கட்சிகளையும் ஒன்றிணையுமாறு கூவி அழைப்பு விடுத்திருக்கிறார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ. தேசிய நெருக்கடிக்கு தீர்வுகாண ஆதரவு தாருங்கள் என்பது அந்த அழைப்பின் நோக்காக காணப்படுகிறது.அது மட்டுமன்றி ‘113 ஆசனங்கள் கொண்ட எவரும் வாருங்கள் நாட்டை கையளிக்க தயாராக இருக்கிறேன். அமைச்சுப் பதவிகளை ஏற்றுநாட்டின் நெருக்கடியை தீர்க்க உதவுங்கள்’ எனஅவரால் பகிரங்க அழைப்பொன்று விடுக்கப்பட்டிருக்கிறது.
இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும்’கோத்தபாய பதவி விலகவேண்டும். பிரதமர் மஹிந்த எமக்கு வேண்டாம். ராஜபக்ஷகுடுப்பத்தவர்கள் அனைவரிடமிருந்தும் நாட்டை பாதுகாக்க போராடுகிறோம் அனைவரும் எமது போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் என மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ‘225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவிவிலகச் சொல்லுங்கள். இவர்கள் எமக்கு வேண்டாம்’ என்று தெருத்தெருவாக மக்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் நாடு கதி கலங்கிக்காணப்படுகிறது. குழப்பமும் கொந்தளிப்பும் அமைதியின்மையும் நாட்டை சீரழியும் நிலைக்கு தள்ளியுள்ளது.
இப்போராட்டத்தின் பின்னணியில் ஏதாவது கட்சிகள் இருக்கிறதா?அரசியல்வாதிகள் உள்ளனரா?நாடுகள் உள்ளதா? என்று துருவிப்பார்த்தால் யாரும் இருப்பதாக தெரியவில்லை. இதுவொரு தன்னிச்சையான மக்கள் போராட்டமாக வெடித்துள்ளது. இப்போராட்டத்தில் இளைஞர்கள், யுவதிகள், சட்டத்தரணிகள், அதிகாரிகள், கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் எனவும் சிங்களவர், முஸ்லிம்கள், தமிழர்கள் என்ற வேறுபாடின்றி எல்லாத்தரப்பினரும் பங்குகொண்டு வருவதை காணமுடிகிறது. சுருக்கமாக கூறுவதாயின் பசிக்கும் பட்டினிக்குமான போராட்டமாக இது மாறியிருக்கிறது. ஆளும் அரசாங்கத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற தீவிரத்துடன் மக்கள் போராட்டங்களை நடாத்துவதாக விவரிக்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக அரசாங்கத்தை நடத்திக்கொண்டிருந்த அமைச்சர்கள் அனைவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.04.2022) கூட்டாக பதவிவிலகியுள்ளனர். பாராளுமன்றில் ஆளும்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டு அரசை அலங்கரித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தாம் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துவருகிறார்கள். அரசுக்கு ஆதரவு நல்கியிருந்த இரட்டையர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அவரது சகாக்கள் 14 பேரும் சுயாதீனமாக செயற்படப்போவதாக உண்ணி கழன்றதுபோல் கழன்றுள்ளனர். ஏலவே வெளியேறிய அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவநாணயக்கார ஆகியோர் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியது மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கான வெற்றி என வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் ராஜாங்க அமைச்சராக விளங்கிய ஜீவன் தெண்டமான் அமைச்சுப்பதவியிலிருந்து விலகி தனது கட்சியின் ஆதரவையும் விலத்திக் கொண்டுள்ளார். பங்காளிக்கட்சிகளாக இருந்த 11 கட்சிகள் என அரசுக்கு ஆதரவு நல்கிய உறவினர்களும் கைகழுவிய நிலையில் பிரதி சபாநாயகர் பதவி விலகியுள்ளார். மத்தியவங்கி ஆளுநர் உட்பட பல முக்கிய பதவியாளர்கள் பதவிவிலகிக் கொண்டிருக்கிறார்கள். வெளி நாட்டிலுள்ள இலங்கை தூதரங்களான ஒஸ்லோ பாக்தாத் மற்றும் சிட்னி தூதரங்கள் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஓட்டு மொத்த நிகழ்வுகளையும் பார்ப்பின் வரலாற்றில் என்றுமே நடந்திராத பயங்கர அரசியல் சூறாவளியொன்று இலங்கையில் வீசிக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் யாரை பதவி விலகவேண்டுமென்று இப்போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் பதவிவிலகிக்கொண்டதாக எந்த செய்தியும் வெளிவரவில்லை.
ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று கூட்டரசங்கத்தை அல்லது தேசிய அரசாங்கத்தை அமைக்க தாம் உதவப்போவதில்லை அல்லது இணையப்போதுமில்லை என பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, முஸ்லீம் சமூக கட்சிகளான முஸ்லீம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,மலையக மக்களின் தமிழ் முற்போக்கு கூட்டணி என எல்லாத்தரப்பினரும் கூட்டரசங்கத்துக்கோ அன்றி இடைக்கால அரசாங்கத்துக்கோ தாம் உடன்பாடில்லையென பகிரங்கமா அறிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில்நாட்டின் தலைவராகிய ஜனாதிபதிக்கோ,பிரதமருக்கோ துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாத இக்கெட்டான நிலையொன்று உருவாகியுள்ளது என தெளிவாகவே உணர்த்தப்படுகிறது. எந்தவொரு நாட்டு அரசியல் வரலாற்றிலும் இத்தகையதொரு நெருக்கடியும் இக்கெட்டுக்களும் பதிவாகியுள்ளதாக அறியப்படவில்லை.
இலங்கை தமிழர்களுக்கு எதிராக இறுதிப் போர் நிகழ்ந்த காலத்தில் தெருவில் இறங்கி ஆதரவு தெரிவித்த தென்னிலங்கை மக்கள் பாற்சோற்றை அன்னதானமாக்கியவர்கள் இன்று அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள் அதுவும் 69 லட்ச மக்களால் தெரிவாகிய தலைவருக்கு எதிராக இந்த நிலை இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏன் உருவாகியது என்ற வரலாற்று பின்னணியை அறியவேண்டியது அவசியமானது.
பயங்கரவாதத்திலிருந்து நாட்டைமீட்டெடுத்த துட்டகைமுனு என ஜனாதிபதி கோத்தபாயாவை புகழ்ந்த சிங்கள மக்கள் இப்பொழுது அவர்களிடமிருந்து இலங்கையை மீட்பதற்கான போராட்டை தொடங்கியிருக்கிறார்கள். பௌத்த சிங்கள பேரினவாதத்தை வெளிக் கிளப்பி அந்த வெறி எழுச்சியில் 69 லட்சம் சிங்கள மக்கள் வாக்களித்து இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலைவருக்கு எதிராக இன்று அதே மக்கள் தமது வெறித்தனமான கோபத்தை காட்டும் வகையில் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்புரட்சி செய்யும் துரதிஸ்டவசமான நிலைமை இன்று இலங்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கிய ராஜபக்ஷகளின் குடும்பத்தை அழிக்கவேண்டும் என்று கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டக்காரார் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
- சுதந்திரக்குப்பின் முதல்முறையாக அரசாங்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் போராட்டம்.
அரச தலைவர் மற்றும் ஆட்சியாளர்கள் வீடுகள் சுற்றி வளைப்பு. - ஐந்துபேர் கொண்ட குடும்ப ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியாக இது மாற்றப்பட்டிருக்கிறது.
- பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைதர வீழ்ச்சிகளைக் கண்டு விரக்திஅடைந்த மக்களின் முதல் பொருளாதாரப் போராட்டமாக இது எண்ணப்படுகிறது.
- அரசியல் கட்சிகளின் தூண்டுதலோ,பின்னணியோ அற்ற மக்கள் ஆர்ப்பாட்டம் என விவரிக்கப்படுகிறது.பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற அச்சம் ஒரு புறமிருக்க கலைக்கப்படவேண்டுமென்ற கோஷங்கள் தீவிரமடைந்துவரும் நிலை.
- இராணுவ மய ஆட்சி ஏற்படுமா என்ற பீதியும் பயமும் கொண்ட நிலை
- இந்திய இராணுவம் வரவழைக்கப்படுமா? என்ற சந்தேகம்
இத்தனைக்கும் கால்கோள் இட்டதாக காணப்படுகிறது கடந்த 31 ஆம் திகதி 31.3.2022 இலங்கை ஜனாதிபதி வீட்டுக்கு முன் நாத்தப்பட்ட போராட்டம் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலனோர் இளைஞர்கள், யுவதிகள் மின்னாமல் முழங்காமல் இந்தப்போராட்டம் நடாத்தப்பட்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை (03.04.2022) அரசாங்கத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்புவிடப்பட்டிருந்த நிலையில் இப்போராட்டம் தீடீரென ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு, மின் தண்டிப்பு மற்றும்பொருட் தட்டுப்பாடு,அத்தியாவசிய பொருட்களுக்கான விலையேற்றம் என்பவற்றை முன்வைத்து விரக்தி, வெறுப்பு மெலிட ஆட்சியாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கடந்த 31ஆம் திகதி வியாழக்கிழமை 31.03.2022 நுகேகொடையில் ஜனாதிபதி இல்லம் அமைந்துள்ள மிரிஹானை சந்தியில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமானது நாடு தழுவிய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டமாக மாறும் நெருக்கடியொன்றை உருவாக்கியிருந்தது.
இதனால் சம்பவிடத்துக்கு பொலீசாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அமைதியை கொண்டு வருவதற்காக மின்தடை, தொலைதொடர்ப்பு தடங்கல், ஊரடங்கு உத்தரவு என்ற பல தடைகளை விதித்ததோடு முடியாநிலைகாரணமாக இராணுவம் பொலீஸ் விஷேட அதிரடிப்படை வரவழைத்து கண்ணீர்ப்புகை பிரயோகம், போலி இறப்பர் குண்டு வீச்சு, தண்ணீர்த்தாரகை பிரயோகம், தடியடி போன்றவற்றை பிரயோகித்து ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டிய நெருக்கடி நிலை உருவாகியிருந்தது. இந்த நெருக்கடிநிலை காரணமாக பல பொதுமக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஊடகவியலாளர்கள் படுகாயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். பொது மக்களுக்கும் பொலீசாருக்குமிடையில் வாக்குவாதங்கள் வன்முறைகள் இடம் பெற்றிருக்கின்றன. பொது மக்கள் காயப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். பொலீசார் காயத்துக்குள்ளாகி உள்ளாகியுள்ளனர். வாகனங்கள் பல தீக்கிரை ஆக்கப்பட்டிருக்கின்றன.
1970 ஆம் ஆண்டுக்குப்பின் பட்டினி போரை எதிர்கொண்டிருக்கும் மக்களின் சுய சிந்தனைப் போராட்டமாக இது வெடித்துள்ளது. குறிப்பாக 1953 ஆம் ஆண்டு லங்கா சமாசமாஜ கட்சியால் நடத்தப்பட்ட ஹர்த்தால் என்று அழைக்கப்பட்ட நிர்வாக முடக்கப்போராட்டத்துக்கு நிகராக ஆட்சியை மாற்றுவதற்கான போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது.
நாட்டில் குறிப்பாக கோத்தபாய அரசாங்கத்துக்கு எதிராக ஏன் இந்த ஆர்ப்பாட்டங்களும், கிளர்ச்சிகளும் ஏற்பட்டது என்பது சாதாரணமாக ஆராயப்படக்கூடிய அரசியல் நிகழ்ச்சியல்ல. ஆழமாகவும் அடிப்படை தேடலுடனும் ஆராயப்படவேண்டிய சம்பவங்களாகும்.
2020ஆம் ஆண்டு மார்ச்மாதத்தில் தொடங்கிய கொவிட் – 19 தொற்று காரணமாக நாடு பொருளாதார ரீதியாக நோய்வாயப்பட தொடங்கியது. ஊள்நாட்டு ஊற்பத்தியில்லை, ஏற்றுமதிகள் வீழ்ச்சி,உல்லசப்பயணத்துறை படுமோசமாகியது. அலுவலக சேவைத்துறைகள் முடங்கிப்போயின. தனியார் வருமானங்கள் வீழ்ச்சி கம்பனிகளும் தொழிற்சாலைகளும் கூட்டுத்தாபனங்களும் நட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. பெருந்தோட்டத்துறை மற்றும் சிறுகைத்தொழிற்துறை ஸ்தம்பிதம் அடைந்தன.வெளிநாட்டு வியபாரம், வர்த்தகம் ஆகியன தடுமாறிப்போயின.
இவ்வேளையில்தான் விவசாயத்துக்கான உரப்பாவனையில் எந்த திட்டமுமின்றி ஜனாதிபதி கைவைத்துக்கொண்டதனால் ஒட்டு மொத்த விவசாயிகளின் சினத்துக்கும்ஜனாதிபதி ஆளாகவேண்டி வந்தது. விவசாயிகள் நாடுதழுவிய போரட்டங்களை நடத்தினார்கள். தங்கள் எதிர்ப்பை ஜனநாயக வழியில் முன்னெடுத்து சென்றார்கள்.
ஏலவே,அரசியல் மாற்றங்கள் என்றவகையில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை காரணம் காட்டி 20ஆவது அரசியல் திருத்தம் மூலம் அதிவல்லமையுடைய அதிகாரங்களை தனதாக்கிக்கொண்டதுடன், நிர்வாக நடவடிக்கைகள் என்ற வகையில் ஜனாதிபதி மேற்கொண்ட நியமனங்களில் இராணுவத்தளபதிகளையும் படைத்துறைசார் துறையினரையும் நியமித்து அரச நிர்வாகத் துறையை இராணுவமயமாக்க முயற்சிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் எதிர்க்கட்சியினராலும் அரச அதிகாரிகளாலும் முன்வைக்கப்பட்டது.
இவையெல்லாவற்றையும் மீறியே கடந்த ஒருவருடத்துக்கு மேலாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விஷம்போல் ஏறிக்கொண்டமை. பால்மா,அரிசி, சீனி, பருப்பு என்பவற்றுக்கு உண்டாகியிருந்த தட்டுப்பாடுகளும், விலையேற்றங்களும் எரிபொருள்களுக்கான தட்டுப்பாடுகள், விலையேற்றங்கள் குறிப்பாக எரிவாயுக்கான தட்டுப்பாடுகள் சாதரணமான பாமர மக்கள் தொடக்கம் மத்தியத்தர மற்றும் சீமான் வாழ்க்கை வாழுகின்றவர் வரை நேரடியாக தாக்கமுற்பட்டன.
எரிபொருள் தட்டுப்பாடு டொலர் பற்றாக்குறை ஆகியவற்றை காரணம் காட்டி மின்வெட்டு என்ற அடிப்படை வசதிகள் மீது கைவைக்கத்தொடங்கியதன் விளைவையே இன்றைய போராட்டங்களின் நதி மூலகங்களாக அமைந்தது. இது ஒரு புறமிருக்க ஜனாதிபதியின் வெளிநாட்டு பொருளாதார அரசியல் கொள்கைகள் மீது நேரடியாகவே வெறுப்புக்கொண்ட சர்வதேச நாடுகளும் நிறுவனங்களும் மேற்கொண்ட சதியின் வெளிப்பாடு இவ்வாறு நச்சு வளையம்போல் நாட்டை தாக்கதொடங்கியது.
அனுபவமற்ற அதிகாரிகளின் வழிகாட்டல்கள் ஆலோசனைகளை உள்வாங்கிக் கொண்டு எதையுமே தீர அராயாமல் ஜனாதிபதி நாட்டை வழிநடத்த முற்பட்டது, பிழையான வாய்ப்பாடாக போய்விட்டது.
அனைத்தையும் மீறிய பலவீனமாக மாறிய டொலர்பிரச்சனை இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பை உண்டுபண்ணியதாக பொருளாதார அறிஞர்கள் சுட்டிக் கட்டுகிறார்கள். இதுவே எரிபொருள் தட்டுப்பாடு,ஏனைய பொருட்களின் விலை அதிகரிப்பு, இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்துண்டிப்பு அனைத்து சுழற்சிக்கும் காரணமாகியது என்று எடுத்துக்காட்டப்பட்டது.
உள்நாட்டு பொருளாதாரத்துக்கு இத்தகைய ஊறுகளை விளைவித்த டொலரின் வீழ்ச்சியினால் இலங்கை அரசாங்கத்துக்கு அன்னிய நாடுகளிடமும் சர்வதேச நிதிநிறுவனங்களிடமும் பெற்ற கடனுக்கான கடன் மீள்செலுத்துகை கடனுக்கான வட்டி இறுப்பு ஆகியவற்றில் பாரிய பாதிப்புக்களை உண்டுபண்ணியதன் ஒட்டுமொத்த விளைவாகவே இன்றைய நெருக்கடிக்கான காரணங்களாக மாறியுள்ளன.
டொலர் இன்மை நெருக்கடி என்பது இவ்வாறு பொருளாதார முறையில் விளக்கப்படுகிறது. உலக வங்கியின் ஒரு பிரதான பிரிவாக இயங்கிவருவது சர்வதேச நாணய நிதியம் இதை ஆங்கிலத்தில் (ஐ.ஆ.கு)என்று அழைப்பார்கள். உலக நாடுகளின் நாணய நிதிக்கொள்கையை தீர்மானிப்பதில் இந்நிறுவனம் பிரதான பங்கு வகிக்கிறது. இதில் முக்கியமான விடயம் அமெரிக்க டொலரின் பெறுமதியிலையே நாடுகளின் நாணயங்கள் மதிக்கப்படும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இலங்கை தனது பொருளாதார நடவடிக்கைகளுக்காக குறித்த அளவு டொலரை இருப்பாக சர்வதேச நாணய நிதியத்திடம் வைத்திருக்கவேண்டும். உதாரணமாக 6 பில்லியன் என அவை வரையறுக்கப்பட்டிருந்தபோதும் அந்தளவு இருப்பை பேணாததன் காரணமாகவும் டொலரை பெறும் வருமான மூலகங்களாக ஏற்றுமதிகள் சுற்றுலாத்துறை, நாடுகளின் கடன் சர்வதேச நிதிநிறுவனங்களின் கடன்கள், உதவிகள், நன்கொடைகள் என்பன தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டதே இன்றைய டொலர் பற்றாக்குறைக்கான காரணங்களாக மாறியுள்ளன.
இனி தற்போதைய போராட்ட நிலைமைகளையும் அதன் மறுதலிப்புக்களையும் பார்ப்போம். கடந்த ஒரு வாராமாக இந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அரசாங்கம் அல்லது பாராளுமன்றம் கலையும் மட்டும் இப்போராட்டங்கள் தொடரலாம். ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என்ற கோஷங்கள் இடம்பெறவேண்டுமாயின் அவ்வாறனதொரு நிலைமை தோன்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஜனாதிபதி பதவிவிலகுவதற்கோ அன்றி பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கோ சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரியவில்லை. இவை இடம்பெறவேண்டமாயின் அரசியல் யாப்புக்கு அமைய காரியங்கள் நடந்தேறவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
ஆனால்,ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்கள் எழுப்பும் கோஷங்கள் அவற்றை வலியுறுத்துவதாகவே அமைகிறது.
ஜனாதிபதி அவர்களே அமெரிக்காவுக்கு ஓடுங்கள்.
ஒரு குடும்பத்தை பாதுகாக்கவா அவசரகால சட்டத்தை பிறப்பித்துள்ளீர்கள்.
இலங்கை மக்களாகிய எங்கள் எதிர்காலம் எங்கே?
நீங்கள் திருடிய பணத்தை திறைசேரியில் இடுங்கள்.
டொலர் இல்லை என்றுகூறி எமது பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்புகிறீர்கள்
மக்களே பசிபோக்க எங்களோடு வந்து சேருங்கள்.
ராஜபக்ஷக்களின் ஆட்சி எமக்கு வேண்டாம்.
இவ்வாறு காரசாரமான கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கும் எதிரான இத்தகைய நெருக்கடிகளும் ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரங்களும் மக்கள் எழுச்சிகளும் அரசாங்கத்தை மாற்றியகை;கப்போகிறதா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவியிலிருந்து தூக்கி எறியுமா?பாராளுமன்றம் கலைக்கப்படுமா? என்ற சந்தேகங்களையும் எதிர்பார்ப்புக்களையும் சங்கடங்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.
இதேவேளை பலம்பொருந்திய ஆட்சியை அமைத்துள்ளோம் என்று பெருமை பேசிக்கொண்டிருந்த இன்றைய ஆட்சியாளர்களான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சி பாராளுமன்றில் பெரும்பான்மையை இழக்கும் நெருக்குவாரமொன்று உருவாகியுள்ளது என்பது தவிர்க்கமுடியாத உண்மையாக காணப்படுகிறது.
2020ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலுக்குப்பின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கான கூட்டணிக்கு 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றதுடன், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட ஆதரவுடன் ஆட்சி அமைக்கப்பட்டது.
இன்றைய அரசுக்கு எதிரான நெருக்கடிகள்,ஆர்ப்பாட்டங்கள் என்பன தலைதூக்கி நிற்கும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்தரிபாலசிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சேர்ந்த 14 பேரும்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த 10 பேரும் அரச பங்காளிக் கட்சிகளை சேர்ந்த 15 பேரும், இரலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த 2 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த ஒருவருமாக மொத்தமாக 42 உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள நிலையில் ஆளும் கட்சியினுடைய பலம் தற்பொழுது குறைவடைந்துள்ளது. இந்நிலையில்பொதுஜன பெரமுன 113 என்ற பெரும்பான்மையை இழக்கவேண்டிய நிர்க்கதி ஏற்பட்டுள்ளது. அண்மையில் பொதுஜன பெரமுன சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்துக்கு 160 வாக்குக்கள் அளிக்கப்பட்டு அது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது இவ்விடத்தில் கவனத்துக்குரிய விடயமாகும்.இவ்வாறான அரசுக்குத்தான் நெருக்கடி நிலையொன்று தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில்; பாராளுமன்றுக்கு என்ன நடக்கப்போகிறது? பிரதமர் என்ன செய்யப்போகிறார்? ஜனாதிபதி என்ன முடிவை எடுக்கப்போகிறார்? என்பதெல்லாம் மக்களும் சர்வதேசமும் நிதானமாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.













