LOADING

Type to search

உலக அரசியல்

உக்ரைன் சிறுமிகள் யுத்தகளத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்டார்களா?

Share

குரு அரவிந்தன்

தொழில்நுட்ப வளர்ச்சிகாரணமாக ரஸ்யா – உக்ரைன் யுத்த களத்து நிரூபர்களை விட அதிகளவு யுத்தமுனை செய்திகளை மக்களும், யுத்தத்தில் பங்கு கொள்ளும் போர்வீரர்களுமே நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சாமுவேல் பென்ட் என்ற ஆய்வாளர் தெரிவித்தார். செல்போன்கள் மட்டுமல்ல, ரோன்களும் களத்தில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் வீடியோ படங்களாக்கி அனுப்பு கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். கனடாவில் இருந்தும் தனிப்பட்டவர்கள் ரோன்கள் கொடுத்து உதவியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்தில் முடித்து விடவேண்டும் என்ற எண்ணத்தில்தான் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை ரஸ்யா தொடங்கியது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் இது தள்ளிப் போய்விட்டது. 40 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், உக்ரைன் பெரும் அழிவைச் சந்தித்தாலும், ரஸ்யாவின் எண்ணம் இதுவரை நிறைவேறவில்லை. ஐ.நாவின் எதிர்ப்பு, உலகநாடுகளின் எதிர்ப்பு, நேட்டோ நாடுகளின் உக்ரைனுக்கான ஆதரவு போன்ற காரணிகள் இந்த யுத்தத்தை இழுபறியாக்கிவிட்டன. உக்ரைன் இராணுவமும் கிடைத்த ஆயதங்களைக் கொண்டு ஆங்காங்கே எதிர்த்துத் தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் ஐரோப்பிய நாடுகளின் முழு ஒத்துழைப்பும் கிடைக்காததற்குக் காரணம், அனேகமான நாடுகள் எண்ணெய், எரிவாயு போன்ற எரிபொருட்களுக்கு ரஸ்யாவை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால், ரஸ்யாவைப் பகைத்துக் கொள்ள அவை விரும்பவில்லை.

ஐ.நா. பொதுச்சபை மீண்டும் கூட்டப்பட்டு ரஸ்ய – உக்ரைன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச்சபை வாக்கெடுப்பின் போது 140 நாடுகள் ஆதரவாகவும், 5 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. எதிராக வாக்களித்த நாடுகளில் ரஸ்யா, சிரியா, பெலாரஸ், வடகொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் அடங்குகின்றன. 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கு பற்றவில்லை. பங்கு பற்றாத நாடுகளில் சீனா, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் இருக்கின்றன.

ரஸ்யா உளரீதியான அணுகுமுறையை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் தனது இராணுவத்தினரிடம் மேற்கொள்வது இப்போது தெரிய வந்துள்ளது. 2ஆம் உலகயுத்தத்தின்போது ரஸ்யா மீது படை எடுத்த கிட்லரின் நாஜிப்படைகள், கடும் குளிலுக்குள் அகப்பட்டுத் தறுமாறி, இறுதியில் மே மாதம் 9 ஆம் திகதி ரஸ்ய படைகளிடம் சரணடைந்தன. மே மாதம் 9ஆம் திகதியை வெற்றிவிழாவாக இன்னும் ரஸ்யாவில் கொண்டாடப் படுகின்றது. எனவேதான் மேமாதம் 9 ஆம் திகதிக்கு முன்னபாக உக்ரைனைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று ரஸ்யா நினைத்தது. உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஸ்ய படை வீரர்களைத் துருவித் துருவி விசாரித்த போது, அவர்களிடம் இருந்து இந்தத் தகவல் வெளிவந்தது.

ரஸ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா இப்போது, ரஸ்யா உக்ரைன் மீது இரசாயனத் தாக்குதலை நடத்தலாம் என்றும் கூறுவது, உலக நாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பும் அரசியல் தந்திரம் என்று ரஸ்யாவின் அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். உக்ரைனில் உள்ள லுஹான்ஸக்; பிராந்தியத்தையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபின் இரண்டையும் ஒன்றாக இணைக்கப்போவதாக ரஸ்யாவில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சுமார் 4 இலட்சம் மக்களை ரஸ்யா வலுக்கட்டாயமாகத் தனது நாட்டுக்குக் கொண்டு சென்றுள்ளதாக உக்ரைன் புகார் செய்திருக்கின்றது. இதில் 84,000 சிறுவர்களும் அடங்குவர். ஆனால் அவர்களின் விருப்பத்தின் பெயரில்தான் அவர்கள் அங்கு வந்ததாக ரஸ்யா தெரிவித்திருக்கின்றது.

உக்ரைன் போலாந்து எல்லையில் போலாந்தில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப் படையினரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து உரையாடினார். நேட்டோ உச்சி மகாநாட்டுக்காகப் பெல்ஜியம் சென்ற இடத்தில் இவர் போலாந்திற்கும் விஜயம் செய்தார். சுமார் 12,000 படைவீரர்கள் இங்கே நிலைகொண்டுள்ளனர். உலகிலேயே சிறந்த படைவீரர்கள் என்று அவர்களை ஜனாதிபதி பாராட்டினார்.

உக்ரைன் படையினர் கெரிலா யுத்தம் போல, ரஸ்ய படைகளின் உயர் அதிகாரிகளைப் பார்த்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக சினைப்பர் தாக்குதல்கள்தான் இப்படியான உயர் அதிகரிகள் மீது நடத்தப் படுவதுண்டு. உயர் அதிகாரிகளை வீழ்த்தினால் படையினர் உளரீதியாக நிலை குலைந்து போவார்கள். சென்ற வியாழக்கிழமை 49வது படைப்பிரிவைச் சேர்ந்த ரஸ்ய இராணுவ உயர் அதிகாரியான லெப்ரினன் ஜெனரல் யக்கோவ் ரிசென்சிவ் தளத்தில் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. சென்ற வருடம்தான் இவர் பதவி உயர்வு பெற்றிருந்தார். இவர் உக்ரைன் யுத்தத்தில் கொல்லப்பட்ட 7வது உயரதிகாரியாவார். இதே தளத்தில்தான் சென்றவாரம் மார்ச் 18 ஆம் திகதி இன்னுமொரு லெப்ரினன் ஜெனரல் அன்ட்றி மோடிவிச்வ் என்பவரும் கொல்லப்பட்டார். இவர் 8வது படைப் பிரிவைச் சேர்ந்தவர். யுத்தத்தின் போது, பொதுவாக இது போன்ற உயரதிகாரிகளை முன்னிலை தளத்திற்கு அனுப்புவது கிடையாது. கட்டாயத்தின் பெயரில் அவர்கள் சென்றிருக்கலாம் என இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் பிரச்சனை காரணமாக ரஸ்யா மீது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டதால் ரஸ்யாவின் நேசநாடான சீனா இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. சீனாவில் இயங்கும் முக்கியமான எரிசக்தி நிறுவனங்களாக சினோபெக், சைனா நேஷனல் பெற்றோலியம் கோப்ரேஷன், சைனா நேஷனல் ஓவ்ஷோர் ஓயில் கோப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் ஆசியாவில் பெரிய எண்ணெய் நிறுவனமான சினோபெக் நிறுவனம் ரஸ்யாவுடனான 500 மில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருக்கின்றது. சீனாவின் வெளிவிவகாரச் செயலகம், ‘சீனா சுதந்திரமான பெரியதொரு நாடு, உலகின் எந்தப் பகுதியிலும் வர்த்தகம் செய்யும் உரிமை எங்களுக்கு உண்டு’ என்ற செய்தியையும் வெளியிட்டிருக்கின்றது. இதே நேரம் ரஸ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று தாக்கப்பட்டதால் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இரண்டு ராணுவ ஹெலிகொப்டர்கள் தாழ்வாகப் பற்ந்து வந்து தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் – ரஸ்யாவுக்கு இடையிலான யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை இதுவரை பெலாரஸில் மூன்று தடவைகள் நடைபெற்றாலும் எந்த முடிவுக்கும் அவர்கள் வரவில்லை. துருக்கியில் மீண்டும் ஒருமுறை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்த நிலையில் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்துமுன் ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் என்று ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குறிப்பிட்டார். குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து ரஸ்யா தனது படைகளைக் குறைப்பதாக பேச்சுவார்த்தையின் போது ஒப்புக் கொண்டாலும், இதுவரை எந்த இடத்திலும் படைகள் திருப்பி அழைக்கப்டவில்லை என்று உக்ரைன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆனால் வியாழக்கிழமை உக்ரைனின் அணு உலைகள் இருந்த செர்னோபி என்ற இடத்தில் நிலை கொண்டிருந்த ரஸ்யப்படைகள் திரும்பிச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிதளவு அணுக்கதிர் வீச்சு அப்பகுதியில் இருந்ததால் அவர்கள் அந்த இடத்தை விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் நம்ப இடமுண்டு. அவர்கள் திரும்பிச் செல்லும் போது பெப்ரவரி மாதம் கைது செய்திருந்த உக்ரைன் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களையும் தங்களுடன் கொண்டு சென்றிருக்கிறார்கள். தலைநகர் கிவ்வில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புச்சா என்ற சிறிய நகரத்தைக் கைப்பற்றியிருந்த ரஸ்ய படைகள், அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லும் போது பல பொதுமக்களை சுட்டுக் கொன்றதாக உக்ரைன் தெரிவிக்கின்றது. சுமார் 300 உடல்கள் புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்டன. சிலரது கைகள் கட்டப்பட்டு மிகஅருகே இருந்து சுடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறுமிகளையும் பாலியல் வன்முறை செய்ததாக உக்ரைன் நாட்டு அரசின் மக்கள் பிரதிநிதியான லெசியா என்பவர் குறிப்பிட்டார். ரஸ்யா அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருக்கின்றது. சுமார் 35,000 மக்கள் வரை இந்த நகரத்தில் வாழ்ந்தார்கள். இதே போன்றதொரு அவலநிலை 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரின் போதும் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது நினைவிருக்கலாம். அரசியல் இலாபம் கருதிச் சர்வதேசம் கண்மூடிக் கொண்டு வேடிக்கை பார்ப்பதால்தான், இது போன்ற அவலநிலை ஆங்காங்கே உருவாகிக் கொண்டிருக்கின்றது.

மார்ச் 16 ஆம் திகதி உக்ரைனுக்கு 800 மில்லியன் டொலர் உதவி செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார். இந்தத் தொகைக்கான ஒரு பகுதி ஆயுதங்களும், மருந்து வகைகளும் அனுப்பப்பட்டிருக்கின்றன. கவச வாகனங்களை அழிக்கக்கூடிய ஆயதங்களும், விமான எதிர்ப்புப் பீரங்கிகளும், எம்ஐ 17 ரக ஹொலிக்கெப்டர்களும், மற்றும் சிறிய ஆயதங்களும் அதற்கான வெடிமருந்துகளும் இதில் அடங்கும். இதே நேரம் ரஸ்ய அதிபர் புதினின் இரண்டு மகள்களான மரியா மற்றும் கதரினா ஆகியோரது வங்கிக் கணக்குகளும், சொத்துக்களும் முடக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.