LOADING

Type to search

சினிமா

17 வயதில் தேசிய விருது பெற்று 18 வயதில் தற்கொலை செய்து கொண்ட நடிகை ஷோபா

Share

(இன்று நினைவுநாள்)

தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமானவர், ஷோபா. இவரது  இயற்பெயர் மகாலட்சுமி.

கேரளாவில் கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் 1962 செப்டம்பர் 23-ந் தேதி பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். ஷோபா 1966 ஆம் ஆண்டில் சந்திரபாபுவின் இயக்கத்தில் வெளியான தட்டுங்கள் திறக்கப்படும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற மலையாளத் திரைப்படத்தில் பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது. அதன் பின்னர் இவர் பல மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.

தமிழில் அச்சாணி படத்தில் சிறுவேடத்தில் தலைகாட்டினார். கே. பாலசந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தில் அப்பாவி வேலைக்காரியாக வந்து கவனம் ஈர்த்தார்.

அடுத்து, ஒரு வீடு ஒரு உலகம் (1978), முள்ளும் மலரும் (1978), வீட்டுக்கு வீடு வாசப்படி (1979), ஒரு விடுகதை ஒரு தொடர்கதை (1979), ஏணிப் படிகள் (1979), பசி (1979), அழியாத கோலங்கள் (1979), அகல் விளக்கு (1979), சக்களத்தி (1979), வேலி தாண்டிய வெள்ளாடு (1980), மூடு பனி (1980), பொன்னகரம் (1980), சாமந்திப்பூ (1980), அன்புள்ள அத்தான் (1981) ஆகிய படங்களில் நடித்தார். முள்ளும் மலரும், அழியாத கோலங்கள், மூடுபனி ஆகியவை இவருக்கு பேர் சொல்லும் படங்களாக அமைந்தன.

பசி தமிழ்த் திரைப்படத்தில் நடித்தமைக்காக 17 வயதிலேயே தேசிய அளவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

இயக்குநர் பாலு மகேந்திராவின் படங்களில் தொடர்ந்து நடித்த நிலையில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால், 1980 மே 1-ந் தேதி தனது 18 வயதிலேயே தற்கொலை செய்து கொண்டார். அவருடைய  தாயாரும் 1984 ல் தற்கொலை செய்து கொண்டார்.