மதுரை அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் வீணடிக்கப்பட்ட உணவு அப்புறப்படுத்தப்படவில்லை ஜேசிபி எந்திரம் மூலம் மண் அள்ளிப் போட்டு மூடினர்
Share
மதுரை வலையங் குளத்தில் கடந்த 20 தேதி அதிமுக மாநாடு நடைபெற்றது. இதற்காக அதிமுக சார்பில் தொண்டர்களுக்கு உணவு வழங்க புளியோதரையும் சாம்பார் சாதமும் ஏற்பாடு செய்யப்பட்டன.
இவை தரமற்ற முறையிலும் அரைவேக்காட்டுத்தனமாகவும் இருந்ததால், அதிமுக தொண்டர்கள் வாங்கி சாப்பிடாமல் கீழே கொட்டினர். தொடர்ந்து வந்த அதிமுக தொண்டர்கள் யாரும் உணவு வாங்காததால், மாநாட்டு பந்தலிலே சுமார் டன் கணக்கில் சமையல் செய்த புளியோதரையும், சாம்பார் சாதமும் வீணாகிக் கிடந்தன.
இதனால் சுகாதார சீர்கேடு எழுந்ததது.இது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. உணவு வீண்டிக்கப்பட்ட சமாச்சாரம், ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
இதைத் தொடர்ந்தது, அதிமுகவினர் நள்ளிரவில் ஜேசிபி எந்திரம் மூலம் குழி தோண்டி வீணான உணவைக் கொட்டி மண்ணை அள்ளிப் போட்டு மூடினர்.
பொதுவாக ஒரு பழமொழி உண்டு, ஒருவருக்கு ஆகாதவர் ஏதாவது இடைஞ்சல் செய்தால் “திங்கிற சோற்றில் மண்ணை அள்ளிப் போட்டாயே” என கூறுவார்கள். அந்த பழமொழிக்கு ஏற்ப, அதிமுகவினரே சோற்றில் மண்ணை அள்ளிப் போட்டதாக, பொதுமக்கள் வேதனையோடு விமர்சனம் செய்தனர்.
மாநாட்டு பந்தலில், கொட்டப்பட்ட உணவால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதற்கு சுகாதாரத் துறை சார்பிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா என்பதால், நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவதாகவும், மதுரை மாநகராட்சி துரித நடவடிக்கை எடுத்து, வீணாக கொட்டப்பட்டுள்ள உணவு வகைகளை அப்புறப்படுத்தவும் அப் பகுதி மக்கள் கோரியுள்ளனர்.













