சனாதனம் குறித்த பேச்சு – அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு
Share
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்புலம் குறித்து விசாரிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சனாதனத்திற்கு எதிராக நடந்த மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தின் பின்புலமாக யார் உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, சனாதன தர்மம் குறித்த சர்ச்சை கருத்துகளை கூறியதாக வழங்கப்பட்டுள்ள புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தவிடக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கே, ஆ.ராசா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை விரைந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், முறையீட்டு பட்டியலில் இல்லாத வழக்குகளின் முறையீட்டை ஏற்க முடியாது என தலைமை நீதிபதி சந்திர சூட் மறுப்பு தெரிவித்தார். மேலும், மூத்த வழக்கறிஞர்கள் விசாரணை பட்டியலில் வழக்கை இணைக்காமல், நேரடியாக முறையிடுவது ஏற்புடையதல்ல எனவும் தலைமை நீதிபதி எச்சரித்தார்.













