LOADING

Type to search

இந்திய அரசியல்

குற்றலாத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்

Share

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் இருந்து இரவு வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் பெய்த மழையால் நேற்று அதன் நீர்மட்டம் 73.75 அடியாக இருந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு 2,906 கனஅடியில் இருந்து 6,206 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்து 80.50 அடியானது. அங்கு 26 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. பலத்த மழையினால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, ராதாபுரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சில மணி நேரம் கனமழை பெய்தது.

இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நேற்று இரவு அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், தண்ணீர் வரத்து சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து அருவிக்கரைகளில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.