LOADING

Type to search

இந்திய அரசியல்

சென்னையில் 8 வட்டங்களில் மினி தாலுகா அலுவலகங்கள் அமைக்க முதல் – அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்

Share

சென்னை மாவட்ட வருவாய் அலகிற்குட்பட்ட 8 வட்டங்களில் ரூ.2.14 கோடி மதிப்பீட்டில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் நேரடியாகச் சென்றடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அரசு சேவைகளை முழுமையாக டிஜிட்டல்மயமாக்கி, பொதுமக்களுக்கு எளிதான, விரைவான, வெளிப்படையான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவது தமிழ்நாடு அரசின் நோக்கமாகும். அதன்படி, தமிழ்நாடு அரசு இணையவழி சான்றிதழ் வழங்கும் முறையை விரிவுபடுத்தி வருகிறது. மேலும், வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வகுப்புச் சான்று, முதல் பட்டதாரி சான்று, வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உள்ளிட்ட 26 சேவைகளை இணையவழி மூலம் எந்த நேரத்திலும், எந்த இடத்திலிருந்தும் விண்ணப்பித்துப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏனைய மாவட்டங்களைவிட, மாநிலத்தின் தலைநகரமாக உள்ள சென்னை மாவட்டத்தில் அதிக மக்கள்தொகை உள்ளதால், வருவாய்த்துறை சார்ந்த இணையவழி சேவைகள் மற்றும் இதர நிலம் தொடர்பான சேவைகளைப் பொதுமக்கள் சிரமமின்றி விரைந்து பெறுவதற்கு ஏதுவாக சிறுவட்ட அலுவலகங்கள் உருவாக்க வேண்டியதன் அவசியம் கருதி, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின்படி, 2026-27ஆம் நிதியாண்டிற்கான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கையின்போது “பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இருப்பிடங்களுக்கு அருகிலேயே தங்களுக்கான சேவைகளைப் பெறும் வகையில் சென்னையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினைச் செயல்படுத்திடும் வகையில், அதிக மக்கள்தொகை கொண்ட சென்னை மாவட்டத்தில், வருவாய்த்துறையைச் சார்ந்த அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எவ்வித சிரமங்களுமின்றி தங்களது இருப்பிடங்களுக்கு அருகாமையிலேயே எளிதில் பெறும் வகையிலும் 2.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துணை வட்டாட்சியர்  தலைமையில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மாவட்டத்திலுள்ள 8 வட்டங்களில் பெரம்பூர் வட்டத்திற்குட்பட்ட கொடுங்கையூர் மற்றும் எருக்கஞ்சேரி, மதுரவாயல் வட்டத்திற்குட்பட்ட போரூர், அம்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட முகப்பேர் மற்றும் கொரட்டூர், மாம்பலம் வட்டத்திற்குட்பட்ட சாலிகிராமம், சோழிங்கநல்லூர் வட்டத்திற்குட்பட்ட நீலாங்கரை, பள்ளிக்கரணை மற்றும் சோழிங்கநல்லூர், வேளச்சேரி வட்டத்திற்குட்பட்ட திருவான்மியூர் – பெசன்ட் நகர், மயிலாப்பூர் வட்டத்திற்குட்பட்ட திருவல்லிக்கேணி மற்றும் ஆலந்தூர் வட்டத்திற்குட்பட்ட மணப்பாக்கம் ஆகிய 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.