‘ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் முதல் பதாகை வெளியானது
Share
‘ஐவரி ஸ்ட்ரீட்’ படத்தின் முதல் பதாகை வெளியானது. ஆரா டேல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அபய் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘எஃப் 6 பில்டிங் ஐவரி ஸ்ட்ரீட்’. பேய் திரைப்படம் குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, காதல் எனப் பல்வேறு அம்சங்களைக் கலந்து வித்தியாசமான பேய் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநரான அபய் சங்கர் தனது முதல் திரைப்படத்திலேயே புதுமையான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கலேஷ் ராமானந்த் கதாநாயகனாகவும், ஷ்ரத்தா கோகுல் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தென்னிந்தியத் திரையுலகின் மூத்த நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியான நடிகை கலாரஞ்சினி, கதாநாயகனின் தாயாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரமேஷ் திலக், தலைவாசல் விஜய், சார்மிளா, டிஎஸ்ஆர் ஸ்ரீனிவாசன், கும்கி அஸ்வின், டாக்டர் அமர் ராமச்சந்திரன், பிரதிபா பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவிலிருந்து தனது தாயுடன் சென்னைக்கு வரும் நடுத்தர வயது நபர் ஒருவர், திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார். இருவரும் புதிய வீட்டில் குடியேறிய பின்னர், அங்கு நிகழும் மர்மமான மற்றும் அமானுஷ்ய சம்பவங்கள் அவர்களது வாழ்க்கையை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வீட்டைச் சுற்றி நடக்கும் திகிலூட்டும் சம்பவங்களும், அவற்றின் பின்னணியில் இருக்கும் மர்மங்களுமே இப்படத்தின் சுவாரஸ்யமான கதைக்களமாக அமைந்துள்ளன. திகிலூட்டும் ஹாரர் காட்சிகள், விறுவிறுப்பான திரில்லர் திருப்பங்கள் ஆகியவற்றுடன் குடும்ப நகைச்சுவை, காதல் மற்றும் ஆழமான உணர்வுப்பூர்வமான தருணங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன. பயம், சிரிப்பு, உணர்வு எனப் பல்வேறு அனுபவங்களை ஒருங்கிணைத்து ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஸ்ரீஜித் எடவானா இசையமைப்பதுடன் பின்னணி இசையையும் கவனிக்கிறார். ஒளிப்பதிவை பிரசாந்த் பிரணவம் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஐயப்பன் நாயர் எம்.எஸ். கவனிக்கிறார். புராஜெக்ட் டிசைனராக ஜாக்கி ஜான்சன், விஎஃப்எக்ஸ் பணிகளுக்கு தீபு சந்திரன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஹேஷாம் அப்துல் வஹாப், வினீத் ஸ்ரீனிவாசன், அனிலா ராஜீவ் ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். நவீன் கண்ணன், பீம் ஜி, நவீன் மாரார், ரஞ்சித் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். சி.எம். சாதிக் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக்கலவைப் பணிகளையும், சரண் விநாயக் ஒலி எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்குநராக எஸ்.பி. நாகராஜ், தயாரிப்பு மேலாளராக கே. மகேந்திரன், ஆடை வடிவமைப்பாளராக கே. ராமு, ஒப்பனைக் கலைஞராக ரோகிணி கே.எஸ். ஆகியோர் பணியாற்றியுள்ளனர். சென்னை மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளையும் நிறைவு செய்து வரும் ஜனவரி 2027-ல் இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.













