LOADING

Type to search

இலங்கை அரசியல்

ரணில் அரசின் நம்பகத்தன்மை 10% கீழ் வீழ்ச்சி

Share

Siva Parameswaran

இலங்கையில் நாடு தழுவியளவில் நடத்தபப்ட்ட ஒரு கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10%க்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக கொழும்பை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வெரித்தே ஆய்வு அமைப்பு திங்கள்கிழமை (6) வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டு மக்களின் மன நிலை அல்லது “மூட் ஆஃப் தி நேஷன்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் கணக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21% ஆக இருந்து நவம்பரில் 9% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. நான்கு மாதங்களில் அது அரைவாசிக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 

அதே போன்று கடந்த நான்கு மாதங்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற காரணியும் நான்கு மாதங்களில் 12%ல் இருந்து 6% ஆகக் குறைந்துள்ளது.

அதேபோல், பொருளாதார நம்பிக்கைக்கான சுட்டெண்ணும் 62ல் இருந்து 44%க்கு சரிந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் அனைத்து அம்சங்களிலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் பாரிய வீழ்ச்சியும் பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகின்றன. 

இந்தமூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பு” ஆண்டிற்கு மும்முறை நடத்தப்படுகிறது. இந்தக் கருத்துக்கணிப்பில் பிழை வரம்பு அதிகபட்சமாக 3% க்கும் குறைவாக இருக்கும்படி வரையறுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு நாடு முழுவதிலிருந்தும் 1,029 மக்களிடம் கருத்துக் கேட்டு அது தொகுக்கப்பட்டது. இந்த கருத்துக் கேட்பு கடந்த அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் இடம்பெற்றது.

கணக்கெடுப்பு 1,029 மாதிரி அளவை அடிப்படையாகக் கொண்டது மற்றும் அக்டோபர்’23 கடைசி வாரத்தில் நடத்தப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. தொழிற்சங்கங்கள் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் அதிகரித்த வரி காரணமாக மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று தொழிற்சங்கங்கள் உட்பட பல்தரப்பினர் அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வாழ்க்கைச் செலவினங்கள் தாக்குபிடிக்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது என்று பொதுமக்கள் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகின்றனர்.