LOADING

Type to search

இலங்கை அரசியல்

’இமாலயத் தீர்மானம்’ ஒரு மோசடி என்று கூறி தமிழர்கள் புறக்கணிப்பு

Share

சிவா பரமேஸ்வரன்

பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் (ஜி டி எஃவ்) சில பௌத்த பிக்குகளுகுக்கும் இடையே நடைபெற்ற கூட்டம் ஒன்றை அடுத்து ‘இமாலாயத் தீர்மானம்’ என்று பெயரிடப்பட்ட ஒரு தீர்மானம் தமிழர்களின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

இலங்கையில் ஒரு பல்லினத்தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துச் சமூகங்களின் நல்வாழ்விற்கு இந்த தீர்மானம் வழிவகுக்கும் என்று அந்த தீர்மானத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறுவதை அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரையிலான தமிழர்கள் மற்றும் அமைப்புகள் கடுமையாகச் சாடி அதைப் புறந்தள்ளுவதாக அறிவித்துள்ளன.

அந்த தீர்மானம் சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டுள்ள அந்த தீர்மானமது மோசடியானது என்றும் அது தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் தேவைகளுக்கு எதிரானது என்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து அது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளனர்.

”சுதந்திரம் அடைந்தது முதல் பௌத்த குருமார்களே அரசியல் வரலாற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர், அதுவே தமிழ் மற்றும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு இடையே, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏற்பட்ட ஒவ்வொரு ஒப்பந்தமும் ரத்து செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது” என்று மிகவும் காட்டமாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் அந்த ஆறு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரான்ஸிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பு மையம், ஐரிஷ் தமிழர் பேரவை, தென் ஆப்ரிக்காவின் சமாதனம் மற்றும் நீதிக்கான ஒற்றுமைக் குழு, சுவிஸ் தமிழ் நடவடிக்கைக் குழு மற்றும் மொரீஷியஸிலுள்ள இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் இன மோதல்களுக்கான வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்துள்ளது.

“இலங்கையில் தொடர்ச்சியாக வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட இனைப்படுகொலையில் அரசின் பங்கிருந்துள்ளது என்பதற்கு உறுதியாக ஆதாரங்கள் உள்ளன. யார் ஆட்சியில் இருந்தாலும் ஒரே இன, ஒரே மொழி மற்றும் சிங்கள-பௌத்த நாடு என்கிற நோக்கம் முன்னெடுக்கப்படுவதிலேயே அவர்கள் குறியாக இருந்துள்ளனர்”.

இந்த கூட்டம் தமிழ் மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் எண்ணத்தில் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டது என்றும், இந்த ’தீர்மானம்’ தொடர்பிலான முழு நடவடிக்கையும் எவ்விதமான கலந்துரையாடலும் இன்றி இரகசியமாகச் செய்யப்பட்டது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

”இமாலயத் தீர்மானம்” போன்று எந்தவொரு தீர்மானமும் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் மூலமே செய்யபப்ட்டிருக்க வேண்டும், மேலும் கூட்டத்திற்கு முன்னதாக அது பொதுவெளியில் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை” என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

போருக்கு பின்னரான காலத்தில், இதே போன்று அனைத்து அரசுகளுடன் ஜி டி எஃவ் எடுத்த முயற்சிகள் யாவும் மோசமான தோல்வியைக் கண்டிருந்தன.

உள்ளூர் தமிழ் மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு பதிலாக ஜி டி எஃவ் நேபாளத்தில் பௌத்த பிக்குகளுடன் பேசியுள்ளதை தமிழ் அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். ஜி டி எஃவ்வின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சந்திப்பிற்காக விடுத்த அழைப்பை அவர் நிராகரித்துவிட்டார்.

“சுரேன், உங்களுடனோ அல்லது உங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுடனோ பேசுவதற்கு ஒன்றுமில்லை. போர் முடிந்த பிறகு, இந்த அரசு மிகவும் ஒடுக்குமுறை அரசாக இல்லாவிட்டாலும், ஒடுக்குமுறை அரசுகளில் ஒன்றாக இருந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூட மாவீரர் தின நிகழ்வுகளின் போது, மக்கள் மீது பயங்கரவாத தடைச் சட்டம் கட்டவிழுத்துவிடப்பட்டது, தொடர்ச்சியாக மக்கள் கைது செய்யப்பட்டனர். அரசின் மீது கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டிய தருணத்தில் நீங்கள் அரசின் நடவடிக்கைகளை வெள்ளையடித்து மறைக்க முயல்கிறீர்கள், அதுவும் உள்நாட்டில் ஒருவரைக் கூட கலந்தாலோசிக்காமல் செய்துள்ளீர்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் விருப்பங்களை நிர்மூலமாக்கும் வகையில் உங்கள் குழு போதிய வேலைகளைச் செய்துள்ளது. உங்களது அண்மையை நடத்தை அதில் எந்த மாற்றமும் இல்லை என்பதையே காட்டுகிறது”.

உள்நாட்டிலேயே தீர்வு காணும் நோக்கில் உண்மையை கண்டறிந்து இணக்கப்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ள ஆணைக் குழுவை அமைப்பதற்கு புலம்பெயர் அமைப்புகளுடன் வெற்றிகரமாக பேசி முடிவெடுத்துள்ளதாக, சர்வதேச சமூகத்தை ஏமாற்ற, ஜி டி எஃவின் இந்தக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாய்ப்பை அளிக்கும் என்றும் அந்த ஆறும் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

பெரும்பாலான புலம்பெயர் அமைப்புகள் தமது நேரம், பணம் மற்றும் உழைப்பை, தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள்,மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு பொறுப்புக்கூற வைப்பதற்காக செலவிடும் நிலையிலும், ஐ நா மனித உரிமைகள் ஆணையரின் அலுவலகம் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை முன்னெடுக்கும் சூழலிலும், அதை தடம்புரளச் செய்ய ஜி டி எஃவ் முயல்கிறது என்று அந்த அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.

சரித்திர ரீதியாக அரசியல் தீர்விற்கான உள்ளூர் பொறிமுறைகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

இதே போன்று மற்றொரு ஆறு புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில் ஜி டி எஃவ் அமைப்பு மீது நம்பிக்கை இல்லை மற்றும் அவர்கள் குறிப்பிடத்தகுந்த அமைப்பு இல்லை என்று ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபெட்னா), இலங்கை தமிழ்ச் சங்கம் அமெரிக்கா, ஒன்றிணைந்த அமெரிக்கர்கள் பி ஏ சி, அமெரிக்க தமிழர்கள் நடவடிக்கை குழு மற்றும் உலகத் தமிழர்கள் நிறுவனம் அமெரிக்கா ஆகிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

“கடந்த 2009ஆம் ஆண்டு பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் 14 நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய அமைப்பிலிருந்து பின்னர் அதிலிருந்து 10 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள் அதிலிருந்து விலகியுள்ளன. மேலும் பிரித்தானிய தமிழர் பேரவை, ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், அமெரிக்காவின் தமிழ் செயற்பாட்டுக் குழு (USTAG) ஆகியவையும் ஜி டி எஃவிலிருந்து விலகியுள்ளன. அதன் காரணமாக இந்த ஈடுபாடு மூலம் எட்டப்படும் எந்த முடிவும் பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு இருக்காது என்றும், எனவே அதற்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவே நம்பகத்தன்மை இருக்கும்”.

ஜி டி ஃவ் அமைப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் 2014 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. எனினும் 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் பதவிக்கு வந்த மைத்ரிபால சிறிசேனவால் அது நீக்கப்பட்டது.

எனினும், பதவியிலிருந்து நீக்கபப்ட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் மீண்டும் தடை செய்யப்பட்டு, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் ‘அவர்கள் இனியும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்வதில்லை’ என்று கூறி ஆகஸ்ட் 2022இல் நீக்கப்பட்டது.

இதேவேலை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு “இமாலயன் கூட்டுத் தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளது பேச்சுவார்த்தையை ம்முன்னெடுப்பது மற்றும் இணக்கப்பாட்டு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையை முன்னெடுப்பது தொடர்பில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” என்று கூறியுள்ளது. ஆனால் நாட்டின் புத்தசாசன அமைச்சகமோ சில உயர்மட்ட புத்த பிக்குகள் மற்றும் ஜி டி ஃவ் ஆகியோரின் கூட்டுத் தீர்மானம் தொடர்பில் தமக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறியதாக அந்த அமைச்சின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.