LOADING

Type to search

இலங்கை அரசியல்

மீண்டும் ஆளத் துடிக்கும் ”ராஜபக்சக்கள் குடும்பம்”

Share

”எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது பொதுஜன பெரமுனவினதோ அதன் வேட்பாளர் நாமல் ராஜபக்சவினதோ இலக்கு அல்ல. தமது கட்சியை பாதுகாத்து எம்.பி.க்களை தக்கவைப்பதுடன் ஆதரவாளர்களுக்கும் புத்துணர்வூட்டும் அதேவேளை பொதுஜன பெரமுனவை உடைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடி கொடுப்பதுடன் எதிர்கால ஜனாதிபதியாக வடிவமைக்கப்படும் நாமல் ராஜபக்சவை வெள்ளோட்டம் விட்டுப்பார்க்கும் முயற்சியாகவும் மஹிந்த தரப்பு இந்த தேர்தலை பயன்படுத்த நினைக்கின்றது”

கே.பாலா

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி கதிரையை கைப்பற்றுவதற்கு பலமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது மட்டுமன்றி என்றுமில்லாதவாறு இம்முறை பிரபல வேட்பாளர்கள் பலர் களமிறங்கியுள்ளதால் தேர்தல் களத்தில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதுடன் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதனைக்கூட கணிக்க முடியாத ஜனாதிபதித் தேர்தலாகவும் மாறிப்போயுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தொலைபேசி சின்னத்திலும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க திசைகாட்டி சின்னத்திலும் களமிறங்குவதுடன் ராஜபக்ச சகோதரர்களின் குடும்பக்கட்சியான பொதுஜன பெரமுனவிலிருந்து ”தாமரை மொட்டு”சின்னத்தில் குடும்பவாரிசாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் தற்போதைய எம்.பி.யுமான நாமல் ராஜபக்ச களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை தற்போதுவரை இருந்த தேர்தல் கள நிலைமைகளை புரட்டிப்போட்டுள்ளது.

இவர்கள் மட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாற்றுக்குழுவின் சுயேட்சை வேட்பாளராக முன்னாள் நீதி அமைச்சரும் எம்.பி.யுமான விஜேதாஸ ராஜபக்ச , பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. யான முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் தமிழ்மக்கள் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் எனப் பல பிரபலங்கள் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறங்குவதால் தான் இம்முறை ஜனாதிபத் தேர்தல் பலமுனைப்போட்டியாக மாறியுள்ளது.

ஏற்கனவே இந்த நாட்டை ஆட்சி செய்து அழித்த நிலையில் மக்கள் போராட்டத்தினால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்சக்கள் நாட்டில் தலைமறைவாக திரிந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி பதவியை கொடுத்த புண்ணியத்தினால் மக்களுக்கு தலை காட்ட முடிந்த நிலையில் தற்போது மீண்டும் ஆளத்துடிக்கும் ஆசையினாலும் கட்சியை பாதுகாக்க வேண்டியதேவையினாலும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ,மஹிந்த வாரிசாக சமல், கோத்த ,பசில் ராஜபக்சக்களின் பெறாமகனாக நாமல் ராஜபக்ச களமிறங்குகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்படி பண்டாரநாயக்க குடும்பத்துக்கு சொந்தமானதாகவிருந்ததோ ஐக்கிய தேசியக்கட்சி எப்படி சேனநாயக்கவின் குடும்பத்துக்கு சொந்தமானதாகவிருந்ததோ அதேபோன்றே ராஜபக்ச குடும்பத்துக்காகவே இந்த தாமரை மொட்டு சின்னத்தைக்கொண்ட பொதுஜன பெரமுன கட்சி மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஜனாதிபதி வேட்பாளராக தற்போது நாமல் ராஜபக்சவும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இலங்கையில் குடும்ப ஆட்சி, குடும்ப அரசியல் தற்போதைக்கு முடிவுக்கு வரப்போவதில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலில் குடும்ப ஆதிக்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழான பழைய சட்ட சபைக் காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் டி.எஸ்.சேனநாயக்கவின் மறைவுக்குப் பின்னர் மகன் டட்லி சேனநாயக்காவும் மருமகன் சேர் ஜோன் கொத்தலாவலையும் பிரதமர்களாகப் பதவி வகித்தனர். ஐக்கிய தேசியக்கட்சியின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சரவையில் விவசாய அமைச்சராக அவரது மகன் டட்லி சேனநாயக்க இடம்பெற்றதுடன் தந்தைக்குப் பின் பிரதமராகவும் பணியாற்றினார். இவர் பிரமச்சாரி. .டட்லியின் மறைவையடுத்து ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தை ஜே.ஆர்.ஜெயவர்தன கைப்பற்றிய பின்னரே சேனநாயக்க குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் அஸ்தமித்தது.

எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவம் 2005 ஆம் ஆண்டு வரை அவரது குடும்பத்தின் ஆதிக்கத்திலேயே இருந்தது. பண்டாரநாயக்கவின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆதிக்கத்திலும் அடுத்து மகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்காவின் ஆதிக்கத்திலும் இருந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டார நாயக்கவின் மறைவின் பின்னர் அவரது மனைவி சிறிமாவோ பண்டார நாயக்க பிரதமராகவும் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, ஜனாதிபதியாகவும் மகன் அனுர பண்டாரநாயக்க அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவிகளையும் மைத்துனர் அனுருத்த ரத்வத்த பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்த நிலையில் அனுருத்த ரத்வத்தவின் மகன் லொகான் ரத்வத்த தற்போது இராஜாங்க அமைச்சராக உள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2005 ஆம் ஆண்டே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதிக்கத்திற்குள் வந்தது. பின்னர் 2015 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் கைகளிலிருந்து பறிக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி மைத்திரி பல சிறிசேனவின் கைகளுக்கு வந்து இன்று தலைவர் யார் என்றே தெரியாத தத்துப் பிள்ளையாகவுள்ளது.

முதல் முதலாக 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானவுடன் சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை கைப்பற்றியதையடுத்து கட்சிக்குள்ளும் ஆட்சியதிகாரத்திலும் அவரது குடும்பத்தவர்களின் அரசியல் செல்வாக்கு முன்னைய அரசியல் ஆதிக்கக் குடும்பங்கள் காட்டியிராத அளவுக்கு முனைப்புப் பெற்றது. 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவுடனேயே மகிந்த ராஜபக்ச தனது பரம்பரையின் அரசியல் வாழ்வு பற்றிய பெருமைகளை நினைவூட்டத் தொடங்கினார். ராஜபக்ச குடும்ப ஆட்சி கோலோச்சத்தொடங்கியது.

ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச சபாநாயகராக சமல் ராஜபக்ச , பாதுகாப்பு அமைச்சின் செயலராக கோத்தபாய ராஜபக்ச என சகோதரர்கள் ஆட்சி நடத்த,மஹிந்த ராஜபக்சவின் மகனான நாமல் ராஜபக்ச அமைச்சராகவும் , சமல் ராஜபக்சவின் மகனான சசீந்திர ராஜபக்ச இராஜாங்க அமைச்சராகவும் ராஜபக்சக்களின் சகோதரியின் மகனான நிபுண ரணவக்க பாராளுமன்ற உறுப்பினர் எனப் பதவி வகிக்க ,இவர்களின் குடும்ப உறவுகள் ஏனைய அதிகாரங்களையும் துறைகளையும் திணைக்களங்களையும் பங்கு போட்டுக்கொள்ள ராஜபக்ச குடும்ப விருட்சம் கிளை விட்டுப் பரவியது.

இந்நிலையிலேயே தனது தந்தையும் அரசியல்வாதியுமான ராஜபக்ச பரம்பரையின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிடவேண்டுமென முடிவெடுத்த ராஜபக்ச சகோதரர்கள் அதற்காக நன்கு திட்டமிட்டு தமது தாய்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உடைத்து பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி அதன் தலைவர் பதவியை மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டார் .19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினால் தான் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது என்பதினாலேயே தனது சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சவை தனது குடும்பத்தின் கட்சியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கடந்த 2019 ஜனாதிபதித்தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் களமிறக்கி வெற்றி பெற வைத்தார்.

ஆனால் ராஜபக்ச குடும்பத்தின் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் இராணுவ சர்வாதிகாரம். ஊழல் ,மோசடிகள் ,மனித உரிமை மீறல்கள் .அடக்குமுறைகள் அதிகரித்துப்போனதால் பொறுமையிழந்த மக்கள் வீதிக்கிறங்கிப்போராடியதினால் 2022ஆம் ஆண்டு ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்து ஜனாதிபதியாக விருந்த கோத்தபாய ராஜபக்ச பதவியிலிருந்து நாட்டிலிருந்தும் தப்பியோடினார். பிரதமராக மஹிந்த ராஜபக்சவும் நிதி அமைச்சராகவிருந்த பசில் ராஜபக்சவும் பதவிவிலக ஏனையவர்களான சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, சசீந்திர ராஜபக்ச ஆகியோர் பதவி இழக்க,ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இவ்வாறான நிலையில் மக்களிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள ஐக்கியதேசியக் கட்சியின் தலைவராக பாராளுமன்றத்தை தேசியப்பட்டியல் எம்.பி.யாக பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கி தம்மையும் தமது கட்சியும் ராஜபக்சக்கள் பாதுகாத்துக்கொண்டனர். எனினும் இரு தரப்புக்குள்ளும் முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில் ஜனாதிபதித்தேர்தலை நடத்த வேண்டிய காலம் நெருங்கியதினால் உள்ளக முரண்பாடுகள் வெளிப்படையாக வெடித்தன. மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஆதரவைக்கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டு தமது கட்சி சார்பில் தனி வேட்பாளர் இறக்கப்படுவார் என பொதுஜன பெரமுன அறிவித்தது.

இதனையடுத்து தான் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக ரணில் விக்கிரமசிங்க ஒரு பக்கத்தால் பொதுஜன பெரமுனவை உடைத்து 92 எம்.பி.க்களை தன்பக்கம் இழுத்துக்கொள்ள , மறுபக்கத்தால் பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி வைத்திருந்த விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பில தலைமையிலான பிவிருது ஹெல உறுமய, வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி, மற்றும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, யுத்துகம அமைப்பு என்பனவும் பொதுஜன பெரமுனவிலிருந்து வெளியேறின.

அதுமட்டுமன்றி கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ராஜபக்ச சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்த பங்காளிக்கட்ச்சிகளாகவிருந்த தற்போது அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி, இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான் )தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் கழகம் , அதாவுல்லா எம்..பி. தலைமையிலான தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட இன்னும் சில கட்சிகளும் ரணில் விக்கிரமசிங்க பக்கம் சென்று விட்டன.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பிரபல வர்த்தகரும் எம்.பி.யுமான தம்மிக்க பெரேரா அறிவிக்கப்படவிருந்தமையே பொதுஜன பெரமுனவிலிருந்து 92 எம்.பி.க்களும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவும் பங்காளிக்கட்சிகள் வெளியேறவும் காரணம் என்பதனை இறுதியில் தெரிந்து கொண்ட நிலையிலேயே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை அறிவித்து ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவருக்கு ஆதரவளித்த 92 பொதுஜன பெரமுன எம்.பி.க்களுக்கும் ”செக்”வைத்துள்ளது மஹிந்த ராஜபக்ச தரப்பு. ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச என்ற அறிவிப்பினால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் பொதுஜன பெரமுனவின் 92 எம்.பி.க்களில் பலர் தமது நிலைப்பட்டை மாற்றுவார்கள் என ராஜபக்சவினர் எதிர்பார்க்கின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவது பொதுஜன பெரமுனவினதோ அல்லது அதன் வேட்பாளர் நாமல் ராஜபக்சவினதோ இலக்கு அல்ல. தமது கட்சியை பாதுகாத்து எம்.பி.க்களை தக்கவைக்கும் அதேவேளை பொதுஜன பெரமுனவை உடைத்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கடி கொடுப்பதேயாகும். அத்துடன் எதிர்கால ஜனாதிபதியாக வடிவமைக்கப்படும் நாமல் ராஜபக்சவை வெள்ளோட்டம் விட்டுப்பார்க்கும் முயற்சியாகவும் மஹிந்த தரப்பு இந்த தேர்தலை பயன்படுத்த நினைப்பதுடன் இளைஞர்களின் வாக்குகளே ராஜபக்சக்களின் இலக்காகவும் உள்ளது.

அத்துடன் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கட்சி ஆதரவாளர்களுக்கு புத்துணர்வூட்டுவதுடன் அடுத்த பாராளுமன்றத்தேர்தலில் எதிர்கட்சியாகி மக்கள் மனங்களை மீண்டும் வென்று அதன்மூலம் மீண்டும் ஆட்சிபீடம் ஏறவேண்டும் என்பதே ராஜபக்சக்களின் திட்டம். அதற்காக ராஜபக்சக்கள் எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள் என்பது ஒன்றும் இரகசியமானதல்ல