LOADING

Type to search

கனடா அரசியல்

தனது 19 ஆவது மாணவியின் பரத நாட்டிய அரங்கேற்றத்தை கனடாவில் மேடையேற்ற இங்கு வந்துள்ள ‘பரத,’-மிருதங்க கலா வித்தகர்’ திவ்யா சுஜேன்!

Share

19 ஆவது பரத நாட்டிய அரங்கேற்றம் காணும் கனடா வாழ் அரங்கேற்றச் செல்வி நிஷ்கிதா கோகுல்ராஜ் அவர்களின் ஆற்றலை கனடாவில் மேடையேற்ற இங்கு வந்துள்ள ‘பரத,’ ‘மிருதங்க கலா வித்தகர்’ திவ்யா சுஜேன் அவர்கள் இங்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றார். அண்மையில் கனடா வாழ் குரும்பசிட்டி மக்கள் அமைப்பினால் கௌரவிக்கப்பெற்றார்.


“அன்பின் வழியது உயிர்நிலை” பரத நாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் வெள்ளியன்று 26 .06 .2026 மாலை 5 மணியளவில் Richmond Hill , Performing Arts Centre (10268 Yonge St ) மண்டபத்தில் ஆடல் மடந்தை நிஷ்கிதா கோகுல்ராஜ் அவர்களால் நிகழ்த்தப்பெறுகிறது. இலங்கை அபிநயஷேத்ரா நடனப் பள்ளி இயக்குனர் “கலாசூரி” திவ்யா சுஜேன் அவர்களின் மாணவியான நிஷ்கிதாவின் அரங்கேற்ற நிகழ்விற்கென கனடா வந்துள்ள பரத, மிருதங்க கலா வித்தகர் திவ்யா சுஜேனையும், இந்நிகழ்வை மேலும் சிறப்பிக்க முதன்மை விருந்தினராகப் பங்கேற்பவருமான “ஞானபாநு” ராஜ்குமார் பாரதி ( மகாகவி சுப்ரமணிய பாரதியாரது கொள்ளுப்பெயரன் ) அவர்களையும் அண்மையில் அவர்களது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளின் 500 க்கு மேற்பட்ட நடனக் கலைஞர்களோடு இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்பவராக இணைந்து கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், டென்மார்க்,சுவிற்சர்லாந்து , சிங்கப்பூர், மலேசியா, இந்தியா போன்ற நாடுகளுக்கான கலைச் சுற்றுலாவை வெற்றிகரமாக நிறைவு செய்தவர். நோர்வேயில் நடந்தேறிய திவ்யாவின் Oslo Melaa நிகழ்வில் 80,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டமையையும் விசேடமாகக் குறிப்பிடவேண்டியதொன்று. ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், தனித்துவமான பயிற்சி நுணுக்கங்களையும் கொண்ட இவரின் 19 ஆவது பரத நாட்டிய அரங்கேற்றம் இதுவாகும்.

கலைத்துறையில் ஐம்பது ஆண்டுகளாகப் பயணிக்கும் ஞானபாநு ராஜ்குமார் அவர்களைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தமை பாக்கியமே. எத்துணை ஆழமான புலமை இருந்தபோதிலும், மிகத் திறந்த மனதோடு தமது பிள்ளைப்பருவம் , அன்னை லலிதா பாரதி அவர்களது வழிநடத்தல், மகாகவி பாரதியார் அவர்களின் கொள்ளுப்பெயரன் எனும் தமது பொறுப்பின் கனதி, தமது கடமைகள் எனப்பல்வேறு கோணங்களில் அளவாக, ஆழமாக உரையாடியது மட்டுமின்றி மிக எளிமையாக தனியே எங்களுக்காகவே பாடல்களைப் பாடியதும் எங்கள் உள்ளங்களை நிறைத்திருந்தது. “ஏழாவது மனிதன்” திரைப்பட “நெஞ்சில் உரமுமின்றி” பாடல், ” பாரதியார்” திரைப்பட “கேளடா மானிடவா ” பாடல் உட்பட 6 மொழிகளில் திரைப்பட பாடல்கள் பாடியுள்ள இம்மகத்தான மனிதரை, உலகப்புகழ் பெற்ற கறுப்பினப் பாடகர் Sharon Rose உடன் பணியாற்றிய இப்புலமையாளரை மனதுள் வியந்தபடி விடைபெற்றோம். இத்தகைமையாளர்களை வெள்ளியன்று Richmond Hill , Performing Arts Centre மண்டபத்தில் சந்திப்போமே!

குரும்பசிட்டி ஜெகதீசன். (எழுத்தாளர்)- கனடா