LOADING

Type to search

இந்திய அரசியல்

அதிமுகவில் 2-வது நாளாக இபிஎஸ், சிவி சண்முகம் தனித்தனியே ஆலோசனை

Share

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியானது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கடும் பின்னடைவை சந்தித்தது. 47 இடங்களை வென்று 3-வது இடத்திற்கு அ.தி.மு.க. தள்ளப்பட்டது. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்தார். இந்த தோல்வி அ.தி.மு.க.வில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தமிழகத்தில் நிகழும் அரசியல் மாற்றங்களால் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.வரலாறு காணாத வகையில், தி.மு.க.-அ.தி.மு.க. புதிய கூட்டணி உருவாக போகிறது என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி நேற்று காலை விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்து கூறினார். அதோடு திமுக – அதிமுக கூட்டணி என்று பரவிய கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது .எனினும், எடப்பாடி பழனிசாமி – சிவி சண்முகம் இடையே அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று எடப்பாடி பழனிசாமி வீட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அ.தி.மு.க.வின் தொடர் தோல்வி குறித்தும், கூட்டணி குறித்த முடிவு குறித்தும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பங்கேற்று பேசினர். எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாகவே எம்.எல்.ஏ.க்கள் புகார் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து, ராஜா அண்ணாமலைபுரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வீட்டில் தனியாக மற்றொரு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் 37 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார் மற்றும் அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜியும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரே நாளில் 2 ஆலோசனை கூட்டங்கள், அதுவும் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் நடந்தது அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு 2-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. சிவி சண்முகமும் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சிவி சண்முகம் தலைமையிலான குழுவில் எஸ்.பி வேலுமணி, சி விஜயபாஸ்கர் என முக்கிய நிர்வாகிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருவரும் தனித்தனியே ஆலோசனை நடத்துவதால் அதிமுக மீண்டும் பிளவை நோக்கி செல்கிறதா? என்ற பரபரப்பு அதிமுகவில் ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை சிவி சண்முகம் தரப்பு எடுக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.