திமுகவிடமிருந்து தவெகவிற்கு தாவிய காங்கிரஸ் – செல்வப்பெருந்தகை விளக்கம்
Share
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தமிழ்நாடு காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இருப்பினும் தவெகவுடனும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை. தவெகவுடனான கூட்டணி பேச்சை வைத்து திமுகவிடம் 28 சீட்டுகளையும், ஒரு எம்பி சீட்டையும் பெற்றது. இதனையடுத்தும் தவெகவை தொடர்ந்து விமர்சித்து வந்தது காங்கிரஸ். தேர்தல் முடிவுகளுக்கு முதல்நாள்கூட நேற்று மழையில் முளைத்த காளான் விஜய் என விமர்சித்திருந்தார் செல்வப்பெருந்தகை. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே திமுகவுடனான இரண்டு தசாப்த கால கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவிற்கு தாவியது காங்கிரஸ். இதற்கு திமுக தரப்பிலிருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காங்கிரஸ் சொல்லாமலே சென்றது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை, “இரண்டாவது அமைச்சர் பட்டியலில் காங்கிரஸ் இடம்பெறும். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் இந்த கூட்டணி தொடரும். எந்தெந்த துறை என்பதை தவெக அறிவிக்கும். திமுகவிடம் சொல்லாமல் நாங்கள் தவெகவுடன் செல்லவில்லை. மல்லிகார்ஜுனே கார்கே டி.ஆர். பாலுவிடம் பேசினார், ராகுல் காந்தி கனிமொயிடம் பேசினார்.” என தெரிவித்துள்ளார்.















