LOADING

Type to search

இலங்கை அரசியல்

இரண்டு மரண தண்டணைகளும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையும்!

Share

யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

முன்னாள் போலீஸ்மா அதிபர் ஒருவருக்கு மரண தீர்ப்பு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை.நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர் ஒருவர் மரண தீர்ப்புக்கு உள்ளாகி இருப்பதும் இதுதான் முதல் தடவை.மரணத் தீர்ப்பு விதிக்கப்பட்ட இருவருமே தாங்கள் கருவிகள் என்ற பொருள்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.தமக்கு மேலே பொறுப்பில் இருந்தவர்கள் இட்ட உத்தரவுக்கு அமைய தாங்கள் செயல்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.இந்த இரண்டு மரணத் தீர்ப்புகளின் மூலமும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் யார் யார் சூத்திரதாரிகள் என்று சந்தேகிக்கப்படுகிறார்களோ அவர்கள் அனைவரையும் அரசாங்கம் தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அதேசமயம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை இது மேலும் பலப்படுத்த உதவுமா?


இரண்டு மரணத் தீர்ப்புகள் அரசாங்கம் எதிர்பார்க்கும் இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்துமா? முதலாவது எதிர்க்கட்சிகளை மேலும் தற்காப்பு நிலைக்குத் தள்ளுவது. இரண்டாவது, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை,உள்நாட்டு நீதி பரிபாலனத்துறை போன்றவற்றின் நம்பகத்தன்மையை அனைத்துலக அளவில் பலப்படுத்துவது.

முன்னாள் போலீஸ்மா அதிபர் ஒருவருக்கு மரண தீர்ப்பு விதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் தடவை. நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலர் ஒருவர் மரண தீர்ப்புக்கு உள்ளாகி இருப்பதும் இதுதான் முதல் தடவை. மரணத் தீர்ப்பு விதிக்கப்பட்ட இருவருமே தாங்கள் கருவிகள் என்ற பொருள்பட கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். தமக்கு மேலே பொறுப்பில் இருந்தவர்கள் இட்ட உத்தரவுக்கு அமைய தாங்கள் செயல்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த இரண்டு மரணத் தீர்ப்புகளின் மூலமும் ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பில் யார் யார் சூத்திரதாரிகள் என்று சந்தேகிக்கப்படுகிறார்களோ அவர்கள் அனைவரையும் அரசாங்கம் தற்காப்பு நிலைக்குத் தள்ளியிருக்கிறது. அதேசமயம் உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை இது மேலும் பலப்படுத்த உதவுமா?

இந்த வாரம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய பதவிக்காலத்தை மேலும் நீடிப்பதற்கு வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் இலங்கை நடுநிலை வகித்தது. இலங்கை ஏன் அவரை ஆதரிக்கவில்லை என்ற கேள்விக்கு கூறப்படும் விடை என்னவென்றால், அவர் பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகித்தவர் என்பதாகும். ஆனால் அது உண்மையா? அவர் தனது இலங்கை விஜயத்தின் முடிவில் உத்தியோகபூர்வமாக தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கத்துக்குச் சாதகமானவை. தேசியத் தன்மைமிக்க ஒரு பொறிமுறையை பன்னாட்டு நிபுணத்துவ உதவியோடு பலப்படுத்துவது என்றுதான் அவர் கூறியிருந்தார். அப்படிப் பார்த்தால் அவர் கேட்டதைத்தான் இப்பொழுது ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துவருகிறது. ஆனாலும் அதை விடவும் கூடுதலாக அவர் செய்திருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் கருதுகிறது என்பதனால்தான் அவருடைய பதவி காலத்தை நீடிப்பதற்கான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லையா?

கடந்த ஆண்டு ஐநா தீர்மானத்தின் 43ஆவது பந்தியில் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தீவின் இன முரண்பாட்டு வரலாற்றில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் படைத்தரப்பைக் சேர்ந்தவர் தண்டிக்கப்பட்ட ஒரே ஒரு சந்தர்ப்பமாக கிரிசாந்தி படுகொலை வழக்கைதான் அந்த 43ஆவது பந்தி குறிப்பிடுகிறது. அதற்குப் பின்பு நடந்த விஸ்வமடு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்ட படைத்தரப்பினர் பின்னர் மேல்முறையீடு செய்து வெளியே வந்து விட்டார்கள் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனினும் செம்மணிக்கு வந்து விட்டுச் சென்ற ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தேசியத்தன்மை மிக்க உள்நாட்டுப் பொறிமுறை குறித்துதான் கருத்துத் தெரிவித்திருந்தார் .

அதுமட்டுமல்ல,கடந்த ஆண்டு ஐநா தீர்மானத்தின் மேற்குறிப்பிட்ட பந்தியில் கூறப்பட்டிருப்பதுபோல இலங்கைத் தீவின் இன முரண்பாட்டு வரலாற்றில் பாலியல் வன்முறை சார்ந்த குற்றச் செயலுக்காகத் தண்டிக்கப்பட்ட இளநிலை அதிகாரியான சோமரத்ன ராஜபக்ஷ என்பவர் அக்குற்றத்தை தான் புரியவில்லை என்றும், தான் ஒரு கருவி மட்டுமே என்றும் பொருள் கொள்ளத்தக்க விதத்தில் கடந்த சுமார் மூன்று தசாப்த காலங்களுக்கு மேலாக பகிரங்கமாகக் கூறி வருகிறார். தனக்கு உத்தரவிட்ட பலர் இப்பொழுது பத்திரமாகப் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும் பல புதை குழிகளை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் அவர் ஏற்கனவே கூறிவிட்டார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும் அவர் சார்பாக அவருடைய மனைவி அவர் கூறிய விடயங்களை வெளிப்படுத்தி வருகிறார்.

இப்பொழுது மரணத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் முன்னாள் போலீஸ்மா அதிபரும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஏறக்குறைய அப்படித்தான் கூறுகிறார்கள். தாங்கள் கருவிகள் என்ற பொருள்பட. அப்படியானால் கடந்த சுமார் நான்கு தசாப்த காலத்துக்கு மேலான போர்ப் பரப்புக்குள் நிகழ்ந்த பல குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்படும் பெரும்பாலானவர்கள் தங்கள் கருவிகள் என்றே கூறுகிறார்கள். தங்களுடைய மேலதிகாரிகளை அல்லது தங்களுக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளை அவர்கள் குற்றம் சாட்டுவதாகத் தெரிகிறது.

அதிலும் குறிப்பாக அண்மையில் மரணத் தீர்ப்பு விதிக்கப்பட்டிருக்கும் இருவருமே நாட்டின் உயர் பொறுப்புகளை வகித்தவர்கள். அதுபோல இப்பொழுது தடுப்புக்காவல் விசாரணையில் இருக்கும் சுரேஷ் சலே நாட்டின் உயர் பொறுப்பில் அதாவது சக்திமிக்க படைப் புலனாய்வுக் கட்டமைப்பின் பணிப்பாளராக இருந்தவர்.

இவர்கள் அனைவரும் குற்றச் சங்கிலித் தொடருக்குள் கண்ணிகளாகக் காணப்படலாம் என்றால் அதை இவர்களுடைய தனிப்பட்ட குற்றங்களாக எடுத்துக் கொள்வதா? அல்லது கட்டமைப்பு சார்ந்த குற்றங்களாக எடுத்துக் கொள்வதா? இவ்வளவு உயர் பொறுப்பில் இருந்தவர்களே இவ்வாறு விசாரிக்கப்படவும் தண்டிக்கப்படவும்கூடிய நிலைமைகள் ஏற்பட்டிருப்பது என்பது எதைக்காட்டுகிறது? இலங்கைத் தீவின் படைத்துறை, படைப் புலனாய்வுத்துறை, பாதுகாப்புத் துறை,சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பில் இருந்தவர்கள்… குற்றங்களைத் தடுக்கத் தவறியிருக்கிறார்கள். அல்லது தங்களுக்கு மேலிருந்து உத்தரவிட்டவர்களின் சேவகர்களாகச் செயல்பட்டிருக்கிறார்கள். எனவே இவை தனிப்பட்ட குற்றச்செயல்கள் அல்ல கட்டமைப்பு சார்ந்த குற்றச் செயல்கள்தான்.

இவர்களைப் போன்ற உயர் பொறுப்பில் இருந்தவர்கள் குற்றம் செய்யும் அளவுக்கு மேற்சொன்ன கட்டமைப்புகள் குற்றப் பண்புமிக்கவைகளாக இருந்தன என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால்,இனமுரண்பாட்டின் பின்னணியில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான குற்றங்கள் மன்னிக்கப்படுகின்ற அல்லது நியாயப்படுத்தப்படுகின்ற அல்லது தண்டிக்கப்படாத ஒரு பாரம்பரியத்தின் பின்னணியில், இவர்கள் பொறுப்பாக இருந்த கட்டமைப்புகள் குற்றப் பண்பு மிக்கவைகளாகக் காணப்பட்டன என்பதைத்தான்.

தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் இவர்களைக் கைது செய்வதன் மூலம் இவர்களையும் இவர்களுக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளாக்கி அவர்கள் மீது பழியை போட்டுவிட்டு தப்பிச்செல்ல முடியாது. மாறாக அவை கட்டமைப்பு சார்ந்த குற்றங்கள் என்பதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் குறிப்பிட்ட கட்டமைப்புகளை மறு கட்டமைப்புச் செய்ய வேண்டும்.நிலைமாறு கால நீதியானது அதைத்தான் கோரி நிற்கின்றது.

ஆனால் இங்குள்ள தோல்வி என்னவென்றால், நிலைமாறு கால நீதிச் செய்முறைகள் முன்னெடுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் ஈஸ்டர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன என்பதுதான். அதாவது 2015ல் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்தின் பின்னிருந்து நாட்டில் கட்டமைப்புசார் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஒரு பின்னணியில், ஆனால் பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொடகூறியதுபோல அவ்வாறான கட்டமைப்புசார் மாற்றங்கள் முன்னெடுக்கப்படாத ஒரு பின்னணியில், ஈஸ்டர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.அது ஒருவிதத்தில் ஐநாவின் தோல்வியையும் காட்டுகிறது. நிலைமாற்றம் நிகழாத ஒரு நாட்டில் நிலை மாறுகால நீதியை அமுல்படுத்த முயற்சித்த ஐநா மனித உரிமைகள் பேரவையின் தோல்வியை அது காட்டுகிறது.

நிலைமாறு கால நீதியானது இலங்கை தீவில் எதிர்மறை விளைவுகளைத்தான் ஏற்படுத்தியது. உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏன் தமிழ் மக்கள் நம்பவில்லை என்பதை அது அது ரத்தம் சிந்தி நிரூபித்தது. ஈஸ்டர் குண்டு வெடிப்புகளின் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபாய நாட்டில் நீதி பரிபாலன கட்டமைப்பை நிறைவேற்று அதிகாரம் எந்த அளவுக்கு மேவிச் செல்ல முடியும் என்பதனை மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். மிருசுவில் படுகொலை வழக்கில் நீதிமன்றத்தால் மரணத் தீர்ப்பு வழங்கப்பட்ட ராணுவ சர்ஜன்ரை கோட்டாபய பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். மிருசுவில் கொலைச் சம்பவத்தில் ராணுவ சார்ஜன்ட் சுணில் ரட்டநாயக்க 2015ல் நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்பட்டார்.அவருக்கு மரணத் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் 2021ல் ஆட்சிக்கு வந்த கோத்தாபய ராஜபக்ச அவருக்கு பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்தார்.

அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட சுணில் ரட்டநாயக்க தன்னுடைய நாட்டுக்கு வர முடியாது என்று கனடா அவருக்குப் பயணத் தடை விதித்தது.அவரை பொது மன்னிப்பின்மூலம் விடுதலை செய்த கோத்தாபய ராஜபக்ச உட்பட ஏனைய ராஜபக்சக்களுக்கும் கனடா பயணத் தடை விதித்தது. உள்நாட்டில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை பிரயோகித்து மன்னிப்பு அளிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு வெளிநாடு அவ்வாறு தண்டனை விதித்தமை என்பது மிக அரிதான ஒரு புறநடை. தாயகத்துக்கு வெளியே அதிகளவு தமிழர்கள் செறிந்து வாழும் கனடாவில் வாழும் தமிழர்களுக்குக் கிடைத்த முக்கிய வெற்றி அது. பன்னாட்டு விசாரணைப் பொறிமுறை வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையைப் பலப்படுத்தும் ஒரு வெற்றியும் அது.

தமிழ் மக்கள் மட்டுமல்ல ராஜபக்ச தரப்பும்கூட பன்னாட்டு விசாரணைப் பொறிமுறை அல்லது வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை நம்பகத்தன்மை மிக்கது என்று நம்புகிறது என்பதற்கு ஆகப்பிந்திய உதாரணம் உண்டு. இப்பொழுது கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் இருக்கும் சுரேஷ் சலேயின் வழக்கறிஞரும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகிய சஞ்சீவ ஜெயவர்தன அவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான அனைத்துலக விசாரணைகளின் முடிவில் தமது கட்சிக்காரர் ஆகிய சுரேஷ் சலே குற்றவாளியாகக் காணப்படவில்லை என்பதனை அவர் தனது கட்சிக்காரரை நியாயப்படுத்துவதற்கு ஓர் ஆதாரமாக முன்வைக்கின்றார். அதாவது சுரேஷ் சலேயின் தரப்பு தன்னை நியாயப்படுத்துவதற்கு அனைத்துலக விசாரணையை ஓர் ஆதாரமாகக் காட்டுகிறது. ஈஸ்டர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சுரேஷ் சலே அவ்வாறு அனைத்துலக விசாரணையின் நம்பகத்தன்மையை ஓர் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்றால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் அதைக் கேட்பது நியாயந்தானே?

கடந்த மாத முடிவில் செம்மணியில்,யாழ் கத்தோலிக்க மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருவானவர்கள் ஓர் அமைதிப் பேரணியை முன்னெடுத்தார்கள்.அந்தப் பேரணியின் பிரதான கோரிக்கை பன்னாட்டு விசாரணை வேண்டும் என்பதுதான்.

ஆனால் அரசாங்கம் பன்னாட்டு விசாரணையை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐநா அமர்வுகளில் அதனை வெளிவகார அமைச்சர் விஜித ஹேரத் திரும்பத்திரும்ப வலியுறுத்திக் கூறியிருந்தார்.

பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக்கொள்வதில்லை என்றால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை, உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பு என்பவற்றின் நம்பகத்தன்மையை உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் பலப்படுத்த வேண்டும். அதை நோக்கி அரசாங்கம் தீர்மானகரமாக இயங்குகிறது. ஏற்கனவே செம்மணிப் புதைகுழி விடயத்தை அரசாங்கம் உள்நாட்டு நீதி நிர்வாகக் கட்டமைப்பின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்துகிறது.

கடந்த சுமார் 23மாதங்களாக அரசாங்கம் முன்னெடுத்துவரும் சட்ட நடவடிக்கைகள் யாவும் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மற்றும் நீதிபதிபாலன கட்டமைப்பின் நம்பகத்தன்மையை பலப்படுத்தும் நோக்கிலானவைதான்.ஆனால் குற்றப்பழியை முன்பிருந்த அரசாங்கங்களின் மீது குறிப்பாக எதிர்க்கட்சிகளின் மீது சுமத்துவதன் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது தன்னை எல்லாப் பழிகளில் இருந்தும் விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றதா? எதிர்க்கட்சிகளையும் முன்னைய அரசாங்கங்களையும் குற்றவாளிகள் ஆக்குவதன்மூலம் தேசிய மக்கள் சக்தி தன்னை புனிதமானதாகக் காட்டிக்கொள்ள முற்படுகிறதா? தேசிய மக்கள் சக்தியின் கடந்த 23மாத கால ஆட்சியில் அவர்கள் முன்னெடுத்துவரும் கைது,விசாரணை போன்ற சட்ட நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்மையை பலப்படுத்துவதற்கு அவை போதுமா? குறிப்பாக தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் அவை போதுமா ? ஏனென்றால் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையின் நம்பகத்தன்னையை பலப்படுத்துவது என்பது தமிழ் மக்களின் நம்பிக்கைகளை வென்றெடுப்பதில்தான் தங்கியிருக்கிறது.காரணம்,அந்த விசாரணைப் பொறிமுறையின் பிரதான பலியாடுகளாக இருந்தது அவர்கள்தானே?