LOADING

Type to search

உலக அரசியல்

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர்

Share

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமனில் அரசுப்படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப்போரில் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியாவும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானும் ஆதரவு அளித்து வருகின்றன. ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, ஏமனில் உள்நாட்டுப்போர் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்து வருகிறது. அரசுப்படையினரும், ஹவுதி கிளர்ச்சியாளர்களும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மோதலின்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் கலீத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அதேவேளை, இந்த ஏவுகணையை சவுதி வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இதனால், இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அதேவேளை, ஏமனில் உள்ள ஏடன் விமான நிலையம் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலால் ஏடன் விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த தாக்குதலை தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.