ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீடு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது: 9 மாத சிறை உறுதி!
Share
இஸ்லாமிய மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் விதித்த 9 மாத சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் யூன் 23ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தச் சிறைத்தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி ஞானசார தேரர் தரப்பால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனுவை முழுமையாக நிராகரித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
வழக்கின் பின்னணி
கடந்த 2016ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையிலும், நாட்டின் பல்லின சமூகங்களுக்கு இடையிலான சிநேகபூர்வ நல்லிணக்கத்துக்குத் தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் கருத்து வெளியிட்டதாகக் கூறி, இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பொலிஸாரால் ஞானசார தேரருக்கு எதிராக இவ்வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இவ்வழக்கு தொடர்பான நீண்ட மற்றும் விரிவான விசாரணைகளின் பின்னர், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஞானசார தேரர் குற்றவாளி எனச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு 9 மாதகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
மேல் நீதிமன்றத் தீர்ப்பு
கீழ் நீதிமன்றத்தின் அத்தீர்ப்பானது சட்டப்பூர்வமானது என்றும், அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் இன்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, பிரதிவாதியின் மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, தண்டனையை அமுல்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
















