LOADING

Type to search

இலங்கை அரசியல்

பெரும் போர்க்களம் மாறிய இலங்கை நாடாளுமன்றம்!

Share

செங்கோலைக் கைப்பற்ற எதிர்க்கட்சி முயன்றதால் மன்றத்தின் நடவடிக்கைகள் அவசரமாக ஒத்திவைப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தில் யூன் 23ம் திகதி அன்று ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம், கூச்சல் குழப்பம் மற்றும் தள்ளுமுள்ளு காரணமாகச் சபை நடவடிக்கைகள் சபாநாயகரால் 10 நிமிடங்களுக்கு அவசரமாக ஒத்திவைக்கப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் தற்போதைய முக்கிய கட்டமைப்புப் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகரிடம் முறைப்படி பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது.

எனினும், நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக இந்த அவசர விவாதக் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், இதற்காக நாடாளுமன்றத்தில் தற்சமயம் நேரம் ஒதுக்க முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார். சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் நடுவணைத்துக்கு வந்து கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டன. இதன் உச்சக்கட்டமாக, ஆவேசமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரின் ஆசனத்தை நோக்கி முன்னேறி, நாடாளுமன்றத்தின் இறையாண்மையின் சின்னமான செங்கோலைக் கைப்பற்றவும் முயன்றனர்.

இதனை ஆளும்கட்சி உறுப்பினர்கள் தடுக்க முற்பட்டதால் இருதரப்புக்கும் இடையே சபைக்குள் பெரும் தள்ளுமுள்ளு நிலவியதுடன், சபையே போர்க்களமாக மாறியது.

சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து சீராக முன்னெடுத்துச் செல்ல முடியாத அளவுக்குப் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துத் தனது ஆசனத்தை விட்டு எழுந்து சென்றார்.

இந்தச் சம்பவம் நாடாளுமன்ற வட்டாரத்தில் யூன் 23ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.