LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழகத்திற்கு காவேரியில் நீர் திறக்க காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது

Share

தமிழகத்திற்கு காவேரியில் நீர் திறக்க காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவேரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா – தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வருகிறது. இதனையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவேரி மேலாண்மை ஆணையம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டில்லியில் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நடந்தது. இதில் தமிழகம், கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவேரியில் இருந்து 29-ந்தேதி முதல் தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவேரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்திற்கு காவேரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை. கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறி வருகிறது. தமிழகத்திற்கு காவேரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவேரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காவேரி மேலாண்மை ஆணையத்தில், கர்நாடக அரசு முறையீடு செய்தது. இந்த நிலையில், தமிழகத்திற்கு காவேரியில் நீர் திறக்க வேண்டும் என்று காவேரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை காவேரி மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தி உள்ளது. இதன்படி, தமிழகத்திற்கு தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.