LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘தியாக தீபம்’ திலீபன் சிலை உடைப்பு விவகாரத்தைக் கண்டித்து யாழ்ப்பாண. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கை!

Share

பு.கஜிந்தன்

தமிழ் மக்களின் நினைவுகூரும் உரிமையை கேள்விக்குள்ளாக்கி, தியாகதீபம் திலீபனின் வெண்கலச் சிலையை அகற்றிச் சென்ற இலங்கை அரச பேரினவாத அடக்குமுறைக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள கண்டன அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது வெண்கலச் சிலையை இலங்கை காவற்துறையினர், 27/09/2026 அன்று காலை 6:30 மணியளவில், அத்துமீறி அகற்றி எடுத்துச் சென்றுள்ள செயலினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக எமது கண்டனங்களைப் பதிவு செய்கின்றோம். இச்செயல், தமிழ் மக்களின் நினைவேந்தல் உள்ளிட்ட கூட்டுரிமைகளின் மீது தொடுக்கப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இது தொடர்ந்து ஆளும் இலங்கை அரசுகளின் புரையொடிப் போயுள்ள சிங்கள பௌத்த பேரினவாத மனோ நிலையின் மாறாத வடிவமொன்றாகும்.

இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயக விடுதலைக்காக அறப்போர் போர் செய்து தன்னுயிர் ஈந்த தியாகதீபம் திலீபன் அவர்களை அமைதி வழியில் நினைவுகூருவது என்பது தமிழர்களின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையைத் தொடர்ச்சியாகப் பறிப்பதும், நினைவுச் சின்னங்களை அகற்றுவதும், சிறிலங்கா அரச பேரினவாதம் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாகத் தனது அடக்குமுறையைக் காட்டி நிற்பதற்கு ஒரு தெளிவான ஆதாரமாக விளங்குகின்றது.

தமிழர்களின் தாயகமெங்கும் கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ் மக்களை உளவியல் ரீதியாக ஒடுக்கும் நோக்கோடு பெருமளவான ‘போர் வெற்றிச் சின்னங்கள் நிறுவப்பட்டுள்ளன. பௌத்த பேரினவாத ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக அவை இன்றும் தமிழர் தேசத்தில் திணிக்கப்பட்டு சிறீலங்கா இராணுவத்தால் பராமரிக்கப்படுகின்றன. ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக அந்த வெற்றிச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை, அறப்போர் செய்து தன்னுயிர் ஈந்த ஒருவரை தமிழ் மக்கள் கண்ணீரோடு நினைவுகூருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நினைவுச் சிலையை அங்கிருந்து அகற்றிச் செல்வது எத்தகைய நீதி?

இவ்வாறு மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி, அவர்களின் மனங்களை துன்புறுத்துகின்ற இத்தகைய செயற்பாடுகள், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கொந்தளிப்பான ஒரு மனநிலையை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி, தமிழ் மக்கள் மீதான பேரினவாத சக்திகளின் தொடர்ச்சியான இனவாதப் போக்கிற்கு, அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவளித்து வருகின்றது என்பதையே இந்தச் செயற்பாடு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஒடுக்கப்படும் மக்களின் மனங்களை மேலும் ரணப்படுத்தும் இத்தகைய சீண்டல்கள், நல்லிணக்க மாயைக்கு பின்னிருந்து மெல்ல வெளித்தெரியும் சிங்கள பௌத்த பேரினவாத மனோநிலையேயன்றி வேறில்லை.

சிறிலங்கா அரசிற்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ‘பயங்கரவாதிகள் எனக் முத்திரை குத்தப்பட்ட ஜே.வி.பியினரின் நினைவுச் சின்னங்களை நிறுவி, நினைவேந்தல்களை தெற்கில் பகிரங்கமாக முன்னெடுப்பதற்கும் சிறிலங்கா அரச இயந்திரங்கள் ஆதரவளித்து வருகின்றன.

தெற்கில் அரசைக் கவிழ்க்க ஆயுதமேந்தியவர்கள் சுதந்திரமாகக் கொண்டாடப்படுவதும், வடக்கில் தமிழர் உரிமைக்காக அமைதி வழியில் உயிரீகம் செய்தவரை நினைவு கூருதல் குற்றமாக்கப்படுவதும் எவ்வகையில் ஜனநாயகம்? இதுதான் சிறீலங்கா அரசு கூறும் ‘சமத்துவமா?

ஈழத்தமிழர் மனங்களின் பதிந்துவிட்ட தியாக தீபத்தை, அடக்குமுறைகள் மூலம் தமிழர் மனங்களிலிருந்து அகற்றவிடலாம் என எண்ணும் சிறிலங்கா அரச இயந்திரத்திற்கு ஒன்றை தெளிவாகச் சொல்கிறோம் ‘உங்களால் சிலைகளை மட்டும் தான் அகற்ற முடியுமேயன்றி, தமிழர் தேசக் கனவையல்ல!

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் இந்தத் தொடர்ச்சியான சிறிலங்கா அரச அடக்குமுறைக்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மனித உரிமைச் சக்திகளும் ஓரணியில் திரண்டு குரல்கொடுக்க வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறைகூவல் விடுக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.