LOADING

Type to search

இலங்கை அரசியல்

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஆடை சிக்குண்டு தென்கிழக்கு பல்கலை மாணவி பரிதாப மரணம்!

Share

– நிந்தவூரில் சோகம்

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பள்ளை பகுதியில் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை  மாலை இடம்பெற்ற விபத்தில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பயிலும் 26 வயதுடைய திருமணமான மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நிந்தவூர் 9 ஆம் பிரிவு மையவாடி வீதியைச் சேர்ந்த பக்கீர் முகைதீர் பிஸ்மி பாத்திமா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று, பல்கலைக்கழக இறுதி ஆண்டுக்கான பாடச் சமர்ப்பிப்பை நிறைவுசெய்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தச் சோக விபத்து நேர்ந்துள்ளது.

மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மாணவியின் ஆடை எதிர்பாராதவிதமாகச் பின் சக்கரத்தில் சிக்குண்டதால், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவி உடனடியாகக் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், தீவிர சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.

உயிரிழந்த மாணவிக்குத் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன என்றும், அவரது கணவர் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றார் என்றும் தெரியவந்துள்ளது.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் நூர்டீன் சர்ஜூனின் உத்தரவுக்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

பிரேத பரிசோதனையின் பின்னர், தலையில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக உண்டான இரத்தப்போக்கே மரணத்துக்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து நிந்தவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.