“வரலாற்றுப் பதிவின் தடம் – கனடாவில் இடம்பெற்ற 2வது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு”
Share
தொல்காப்பியத்தின் பெருமையையும் தமிழின் தொன்மையையும் உலக அரங்கில் எடுத்துச் செல்வோம் என்ற இலக்கை உள்ளத்தில் விதைத்து, பெரும் விருட்சமாக வளர்த்து, அதன் கனிகளை உலகத் தமிழர்களுக்குக் கொடையாக்கிய அற்புதத்தை அரங்கேற்றிய கனடா தொல்காப்பிய மன்றத்தின் தலைவியும். உறுப்பினர்களும்’!
பல குரல்கள் ஓங்கி ஒலித்த அந்த அரங்கில், பல இதயங்கள் ஒன்றாகத் துடித்த அந்த உன்னதமான தருணத்தில், “அம்மா” என்ற ஒரு சொல் எங்கள் செவிகளில் அசரீரியாகவே ஒலித்தது. பெருமிதமும் உவகையும் நன்றியும் ஒன்றுசேர எங்கள் மனங்களை நிறைத்த அந்த மகத்தான பொழுதுகள் நிச்சயமாக ஒரு வரலாற்றுப் பதிவே!
இரண்டாவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு ; புரட்டாதி மாதம் 19, 20 ஆகிய திகதிகளில் கனடா- மார்க்கம் நகரில் Bill Hogarth உயர்தரப் பாடசாலையில் நிறைவு கண்டிருக்கிறது.
பசி, தாகம், தூக்கம், களைப்பு, ஆறுதல் என எதையும் பொருட்படுத்தாமல், அரங்கின் ஆரம்பம் முதல் இறுதிவரை நிகழ்ந்த ஒவ்வொரு அரிய நிகழ்வையும் பூரிப்புடன் சுவைத்து, இரசித்து, அனைவரையும் அரவணைத்துப் பார்த்த அந்த அற்புதமான ஆளுமையை நாம் “அம்மா” என்று அழைத்து தன்னிறைவு பெற்றோம். இளமையின் முன்னோடியாகவும், தொலைநோக்குச் சிந்தனையின் அடையாளமாகவும், தமிழ்ப்பற்றின் உயிரோட்டமாகவும் நாம் கண்ட தலைவர், முனைவர், பேராசிரியர், திருமதி “செல்வநாயகி ஸ்ரீதாஸ் அம்மா”….!அவர்கள் எங்களுக்குக் கிடைத்த வரம்! என்று கூறினால் மிகையாகாது.
தொல்காப்பியத்தின் பெருமையையும் தமிழின் தொன்மையையும் உலக அரங்கில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை உள்ளத்தில் விதைத்து, அதனை ஒரு மாபெரும் விருட்சமாக வளர்த்து, அதன் கனிகளை உலகத் தமிழர்களுக்குக் கொடையாக்கியவர் ஶ்ரீதாஸ் அம்மா.
எதை, எங்கு, எவ்வாறு, எப்படி விதைத்தால் அது விருட்சமாகி வளர்ந்து பலன் கொடுக்கும் என்பதை உணர்ந்து; முதலாம் இரண்டாம் மூன்றாம் நான்காம் …தலைமுறைகள் மத்தியில் தமிழை அறுவடையாகத் தந்துள்ளார். நிகழ்ச்சிகளின் தொனிப் பொருள் பற்றிய புரிதலைக் கண்டு வியந்தோம். அவர்களின் தொலைநோக்குப் பார்வையை, இந்த மாநாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும் நாம் அனுபவித்தோம். இளம் தலைமுறை மாணவர் படைத்த மண்ணின் வேர் என்ற நாடகம்; தமிழர் வாழ்வியல் – தமிழ்மொழிக் கட்டமைப்பு மற்றும் அடையாளவியல் சார்ந்த கண்காட்சி; ஆய்வாளர்களின் கட்டுரைகள், மாணவர்களின் பேச்சு-நான் அறிந்த தொல்காப்பியம், பெரியோருக்கான – அனைவருக்கும் தொல்காப்பியம், உலகளாவிய ஆய்வாளர்களின் இணையவழி உரை, நேரடி ஆய்வுரைகள்; தொல்காப்பியத்தின் பெருமைகூறும் வில்லுப்பாட்டு, தொல்காப்பிய நூற்பா அடங்கிய இசைக் கச்சேரி, கண்ணகி அம்மன் நாட்டிய நாடகம்; தமிழர் பாரம்பரியக் கலை வடிவங்கள் பறையிசை, யாழிசை, யோகக்கலை; முத்தமிழ் கலந்த கருப்பொருள்களை முதன்மையாக்கி, தொல்காப்பியத்தை ஏன் கற்க- கற்பிக்க- பரவலாக்க- கொண்டாட வேண்டும் என்று உலகம் அறியப் பல்வகை நிகழ்ச்சிகளை நிகழ்வாக்கிக் கொண்டாடி மகிழ்ந்தோம்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்”
என்ற குறளின் வரிகளுக்குள் பேராசிரியர் இல சுந்தரம் அவர்களை நாங்கள் உவமையாக்குவது சாலவும் பொருந்தும். தமிழ்மொழியின் மீது அளவுகடந்த பற்றுள்ள அம்மாவின் கனவுகளை நனவாக்கும் பெரும் பொறுப்பைத் தம் தோள்களில் சுமந்து , தனது அறிவாற்றலாலும் ஆழ்ந்த அனுபவத்தாலும் திறன்மிகு தகைமைகளாலும் எல்லோரையும் உள்வாங்கும் பாங்குடன் தொழிற்படுபவர் – எங்கள் ஒருங்கிணைப்பாளர், முனைவர் பேராசிரியர் நல் ஆசான் திரு. இல. சுந்தரம் பெருந்தகை!அவரை நாம் நன்றியுடன் பாராட்டுகின்றோம்.
புலம்பெயர்ந்து, தேச எல்லைகளைக் கடந்து, வெளிநாடுகளில் வாழும் தமிழ்த் தலைமுறைகளுக்குத் தொல்காப்பியத்தை எளிமையாகவும் இனிமையாகவும் முறையாகவும் கொண்டு செல்லும் நோக்கில், “நானறிந்த தொல்காப்பியம்”, “தமிழ் அறிதிறன் தேர்வுகள்”, தமிழ்த்திறன் போட்டிகள், “சிறுவர்க்கான தொல்காப்பியம்”, பெரியோருக்கான “அனைவருக்கும் தொல்காப்பியம்”, “விநாடி வினா” போன்ற பல்வேறு கற்கை நெறிகளைத் திறம்பட முன்னெடுத்து, அவற்றிற்குரிய பாடவிதானங்களை முறைப்படித் தொகுத்து, பரவலாக்கி, செயற்படுத்திய திறனும் பெருமையும் அவரையே சாரும்.
ஒரு கனவு உருவாகுவது ஒரு தொடக்கம்; அந்தக் கனவைத் திட்டமிட்டு, கட்டமைத்து, செயலாக்கி, பலரையும் அதனுள் இணைத்து வெற்றியாக்குவது மிகப்பெரிய சாதனை. அந்த வகையில், அம்மாவின் கனவுகளை நனவாக்கிய நாயகனாக பேராசிரியர் இல. சுந்தரம் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி!
அதேபோல், தொல்காப்பிய மன்றத்தின் செயல்திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து, அவற்றை எங்கள் கண்முன்னே காட்சிகளாக மாற்றியவர், மன்றத்தின் செயலாளர், பொறியியலாளர், தமிழ் ஆர்வலர் திரு. சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் ஆவார். திட்டமிடப்பட்ட பணிகளைத் திறம்பட ஒருங்கிணைத்து, நேர்த்தியுடனும் பணிவுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்படுத்திய அவரது அர்ப்பணிப்பு தனிச்சிறப்புக்குரியது.
சிந்தனைகள் திட்டங்களாகவும், திட்டங்கள் செயல்களாகவும், செயல்கள் வெற்றிகளாகவும் மாற வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அவரது பங்களிப்பு அமைந்தது. ஒரு சிறந்த செயல்திட்டம் எவ்வாறு கண்ணெதிரில் உயிர்பெறும் என்பதை இந்த மாநாடு நமக்கு உணர்த்தியது.
எங்கள் கனடா- தொல்காப்பிய மன்றத்தின் பொருளாளரின் தாராள மனப்பான்மைக்கு ஈடு இணை இல்லை. வார்த்தைகள் போதாது. ஓயாத கால்களுடன், இடைவிடாத உழைப்புடன், கடமை உணர்வும் கண்ணியமும் சிறிதும் குறையாமல், தமக்குரிய பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றிய அவர்களின் பங்களிப்பும் இவ்வெற்றியின் முக்கியமான ஓர் அங்கமாகும்.
மேடையில் தெரிந்தவர்கள் மட்டுமல்ல; மேடைக்குப் பின்னால் அமைதியாக உழைத்த ஒவ்வொருவரின் வியர்வையும் இந்த வெற்றியில் கலந்திருக்கிறது.
ஆக்கபூர்வமான சிந்தனைகளுடன் இரவு பகலாக விழித்திருந்து மனித வலுச்சேர்த்தவர்கள் பலர்! பொறுப்புகள் அளவின்றிப் பலவாக ஆளணி முகாமைத்துவத்துடன் ஒழுங்கமைக்கப்பட்டன. பணிகள் பலவாக இருந்தாலும் நமது நோக்கம் , ‘ஊர் கூடித்தேர் இழுப்போம்’ என்பதாகவே இருந்தது. நாம் அனைவரும் தனித்தனியாக அல்லாமல், “குழு” என்ற ஒரு தனிப்பெரும் சொல்லுக்குள் ஒன்றிணைந்தோம்.
யாருடைய பங்களிப்பு சிறியது, யாருடைய பங்களிப்பு பெரியது என்று அளவிட முடியாது. ஒவ்வொரு கையும் ஒரு பங்களிப்பு; ஒவ்வொரு காலடியும் ஒரு முன்னேற்றம்; ஒவ்வொரு எண்ணமும் ஒரு விதை; ஒவ்வொரு உழைப்பும் இந்த வரலாற்றின் ஒரு வரியாகும்.
அதனால், இந்த மாபெரும் ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றிக்காக தங்களுடைய நேரத்தையும், உழைப்பையும், அறிவையும், திறமையையும், ஆற்றலையும் அர்ப்பணித்த ஒவ்வொருவருக்கும் எமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கனடா மண்ணில் இருந்து உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தொல்காப்பியத்தின் பெருமையையும் தமிழின் தொன்மையையும் உலக அரங்கில் எடுத்துச் சென்ற இந்த மாநாடு, ஒரு நிகழ்வாக மட்டும் முடிந்துவிடக்கூடாது.
இது ஒரு விழாவின் நிறைவு அல்ல;
ஒரு வரலாற்றுப் பதிவின் ஆரம்ப அத்தியாயமே!
இந்நிகழ்வு கனடாவில் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றி மட்டுமல்ல;
தமிழின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திய ஒரு மாபெரும் முயற்சியின் வெற்றி!
இந்த வெற்றிக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொரு உள்ளத்தையும் நன்றியுடன் நினைவுகூர்வோம். அவர்களின் அர்ப்பணிப்பை மனதாரப் பாராட்டுவோம். அவர்களின் பாதையில் அடுத்த தலைமுறையும் பயணிக்க வழிவகுப்போம்.
இந்த விழா உலக அரங்கில் ஒரு வரலாற்று ஆவணமாக என்றும் நிலைத்திருக்கட்டும்!
தொல்காப்பியத்தின் பெருமை ஓங்கட்டும்!
தமிழின் தொன்மையும் புகழும் உலகெங்கும் பரவட்டும்!
தமிழறிவின் பயணம் தலைமுறைகள் தோறும் தொடரட்டும்!
தொல்காப்பிய மன்றத்தின் பணிகள் மென்மேலும் பரவட்டும்! அதற்காக
ஒன்றாய் இணைந்து
நிமிர்வோம் ‘தமிழர்’ என்ற பெருமையுடன்!
கனடா-தொல்காப்பிய மன்றத்தின் சார்பில்,
(திருமதி. மஞ்சுளா ராஜபால் மற்றும் திருமதி. வித்தியானந்தி கருணாகரன்)





















