ரஷியாவுக்கு எதிராக வியூகம் வகுக்கும் வகையில் இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி தர டிரம்ப் அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது
Share
ரஷியாவுக்கு எதிராக வியூகம் வகுக்கும் வகையில் இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி தர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளது.
ரஷியா, ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய பொருளாதார தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதனால், ரஷியாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது. ரஷியாவுக்கு எதிராக வியூகம் வகுக்கும் வகையிலேயே அமெரிக்கா அரசாங்கம் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், இந்தியாவுக்கு மாற்று எரிசக்தி தர டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அதிரடி முடிவு எடுத்துள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்தியா தனது எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு நாடுகளை சார்ந்திருப்பது எங்களுக்குத் தெரியும். இதில் எந்தவித வருத்தமும் இல்லை. ரஷியாவுக்கு மாற்றாக இந்தியாவின் மாபெரும் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் முதன்மை நாடாக மாற அமெரிக்கா தயாராக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார். உலகளவில் சமையல் கியாஸ் மற்றும் திரவ இயற்கை கியாஸ் ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில் உள்ளது. எனவே, இந்தியாவுக்கு தேவையான எரிசக்தியை தங்களால் தடையின்றி வழங்க முடியும் என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.
ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நியூயார்க் சென்றிருந்தார். அப்போது அவர் அமெரிக்காவின் புதிய வரி சட்டத்தால் இருநாட்டு உறவு பாதிக்கப்படலாம் என இந்தியா தரப்பில் கவலை தெரிவித்தார். எனினும், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு விலக்கு பிரிவின் கீழ், இந்த வரி விதிப்பில் இருந்து இந்தியாவுக்கு தளர்வு அளிக்க டிரம்ப் அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும், இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடரும் என்றும் அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.















