‘11 ஆண்டுகளாக மேகதாது திட்டத்தை தடுக்க போராடி வரும் ஒரே கட்சி ம.தி.மு.க.தானென’ வைகோ கூறியுள்ளார்
Share
மேகதாது அணை திட்டத்தை தடுப்பதற்கு 11 ஆண்டுகளாக போராடி வரும் ஒரே கட்சி ம.தி.மு.க.தானென அக்கட்சியின் பொதுச்செயாலளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேனியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது; “மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஒரு நல்ல தீர்மானத்தை கொண்டு வந்தார். அனைத்து கட்சிகளும் ஒருமனதாக இணைந்து அந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஒன்றை எச்சரிக்க விரும்புகிறேன். மேகதாது திட்டத்தை கர்நாடக அரசு மட்டும் செய்யவில்லை. இதற்கு பின்னால் இருந்து இயக்குவது மத்திய பா.ஜ.க. அரசுதான். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 7, 8-ந்தேதிகளில் டில்லியில் ஒரு ரகசிய கூட்டம் போட்டனர். அதில் கர்நாடக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எல்லோரும் கலந்து கொண்டனர். மத்திய அரசின் அப்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜவடேகர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது கர்நாடக அமைச்சர்களிடம், மேகதாது அணையை கட்டுவதற்கு நாங்கள் வெளிப்படையாக அனுமதி தர மாட்டோம், ஆனால் நீங்கள் அணையை கட்டிக் கொண்டே இருங்கள் என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இந்த சதித்திட்டம் ஒரு ஆங்கில நாளிதழ் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக நான் காவேரி பாதுகாப்பு இயக்கத்தை ஆரம்பித்தேன். ஊர் ஊராகச் சென்று மேகதாதுவில் அணை கட்டப் போகிறார்கள் என்ற விஷயத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தேன். 11 ஆண்டுகளாக மேகதாது திட்டத்தை தடுக்க போராடி வரும் ஒரே கட்சி ம.தி.மு.க.தான். இப்போது எல்லோரும் அறிக்கை விடலாம், குரல் கொடுக்கலாம். ஆனால் அது அறிவிக்கப்பட்ட காலத்தில் இருந்தே போராடிய கட்சி ம.தி.மு.க. மட்டும்தான். தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களை, ஜீவாதாரங்களை காப்பாற்றும் கடமையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் செய்கின்ற பணிகளுக்கும், வாக்குகளுக்கும் சம்பந்தமே கிடையாது. ஆனாலும், நாம் பிறந்த பொன் நாடாகிய இந்த இன்பத் தமிழ்நாடு பாதிப்புகளுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகவே, எங்களை நாங்கள் அர்ப்பணித்துக் கொண்டு பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
















