முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்: இராணுவத்தினர் மூவர் கைது! ஓக.19 வரை விளக்கமறியல்!
Share
ந.லோகதயாளன்.
முல்லைத்தீவு மாவட்டம், ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தாக்கப்பட்ட பின்னர் காணாமல்போன இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 8ம் திகதி வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 இராணுவத்தினர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் நீதிபதியின் உத்தரவுக்கமைய உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனை சனிக்கிழமை இடம்பெற்றது.முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதுடன் மற்றுமொரு நபர் முதுகுப் பகுதியில் பலத்த அடிகாயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஏனைய 3 நபர்களும் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி அவர்களின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்
இது இவ்வாறிருக்க, முல்லைத்தீவு முத்ஐயன்கட்டு குளத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலத்தின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக ஆய்விற்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தார் என முத்தையன்கட்டு குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் உடற்கூற்றுப் பரிசோதனை சனிக்கிழமையன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
மரணம் தொடர்பான மேலதிக தகவல்களை உறுதி செய்த மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை இடம்பெறுவதாக சட்ட வைத்திய அதிகாரி இறந்தவரின் உறவுகளிடம் தெரிவித்தார்.
இதேநேரம் மளலதிக ஆய்வுகளின போது சீரான ஆய்விற்காக குளத்தின் நீரும் அனுப்பி வைக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் உடலம் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்டது




















