தென் மாநிலங்களின் எதிர்ப்பை உதாசீனம் செய்து தொகுதி மறுசீரமைப்பில் பா.ஜ.க. தீவிரம் – செல்வப்பெருந்தகை கண்டனம்
Share
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஐந்து மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களுக்கிடையே நரேந்திர மோடி அரசு, அவசர அவசரமாக வருகிற ஏப்ரல் 16 முதல் 18-ம் தேதி வரை நாடாளுமன்றத்தை கூட்டி தொகுதி மறுசீரமைப்பு செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற எதிர்கட்சிகள் இந்த முயற்சிகளை தேர்தல் வாக்குப்பதிவு முடிகிற ஏப்ரல் 26-ம் தேதிக்கு பிறகு கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று கூறியதை பா.ஜ.க. ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அதன்படி, இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களில் உள்ள மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறைந்து அவற்றின் பிரதிநிதித்துவம் குறைவதற்கான அபாயம் இருக்கிறது. இதுகுறித்து ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுவரையறையை தள்ளி வைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தென்மாநிலங்களின் எதிர்ப்பை உதாசீனம் செய்து தொகுதி மறுசீரமைப்பில் பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இது குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு 2026-ம் ஆண்டில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக இவையெல்லாம் மக்கள் தொகையை கணக்கிட்டுத் தான் செய்வதாக திட்டமிடப்பட்டிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. அதனால் மக்கள் தொகை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையும் குறைய வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது நாடு முழுவதும் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரித்தால் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய 8 மக்களவை தொகுதிகளை இழக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்படும். அதாவது, தமிழ்நாட்டில் இனி 39 எம்.பி.க்கள் இருக்க மாட்டார்கள், 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார். இன்றைய மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சிகளுக்கு ஓரளவு எண்ணிக்கை இருப்பதால் பா.ஜ.க. அரசின் பாசிச சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்கட்சிகளால் எதிர்த்து குரல் கொடுக்க ஓரளவு வாய்ப்பு உள்ளது. ஆனால், அந்த வாய்ப்பு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இந்தி பேசாத மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒரே தேர்தல், ஒரே வாக்கு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நாடு – ஒரே கலாசாரம் என ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் படையெடுப்புகளால் இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் மேலும் பாதிக்கப்பட்டு இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படுவார்கள். மத்திய அரசின் வரிப் பகிர்வில் தற்போது வஞ்சிக்கப்படுவதை விட பலமடங்கு நிதி குறைக்கப்பட்டு கடுமையாக பாதிக்கக் கூடிய நிலை ஏற்படும். தென் மாநில மக்களின் குரல்வளை ஒடுக்கப்படும். கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கண்டு பன்முகத்தன்மையோடு வாழ்ந்து வருகிற நல்லிணக்கம் சீர்குலைக்கப்படும். எனவே, நரேந்திர மோடி அரசின் வகுப்புவாத, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் சதித் திட்டத்தை முறியடிக்க தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு கடுமையாக எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். அந்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு இன்னும் 10 நாட்களில் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்களிப்பதன் மூலம் பா.ஜ.க.வுக்கும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கும் எதிராக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்ய முடியும். இதுவொரு தமிழ் மக்களின் எதிர்காலம் சம்மந்தப்பட்ட வாழ்வாதார பிரச்சினையாகும். இதனுடைய தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டு மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை ஆற்ற வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.















