த.வெ.க. அரசில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் 2-வது முறையாக அவமதிப்பு? – கனிமொழி எம்.பி. கேள்வி
Share
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கான முயற்சியின் பயனாக, காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்தது. இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்தது. அதனடிப்படையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு ஆளுனர் அர்லேகர் முன்னிலையில், முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். முதல்-அமைச்சர் விஜய்யுடன், புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதன்பின்னர் அவர்களுக்கு இலாகாக்களும் ஒதுக்கப்பட்டன.
ஆனால், அவரது பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து அமைச்சர் மற்றும் த.வெ.க. நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா அளித்த விளக்கத்தில், ‘நீராரும் கடலுடுத்த…’ என தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்று பெருமிதம் உள்ளது. இந்த பாடல் ‘உலகெங்கும் பரவ வேண்டும்…’ என்ற லட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநில பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இப்படியான சூழலில்,தமிழக பொறுப்பு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெற்ற முதல்-அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்த புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுனர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுனருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்து பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான் என்று பதிவிட்டார். இந்த சூழலில், இரண்டாவது முறையாக த.வெ.க. அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடந்தது. இதில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. இதற்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர், த.வெ.க. அரசின் அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதிக்கும் வகையில் மூன்றாவதாக பாடப்பட்டிருக்கும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. சென்ற முறை இதேபோன்று, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளிக்காமல் அவமதிக்கப்பட்டபோது, ‘இனி அவ்வாறு நடக்காது’ என்று த.வெ.க. அரசு கூறியது. தற்போது கண்டும் காணாமல் அமைதி காப்பது எதனால்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
















