LOADING

Type to search

இலங்கை அரசியல்

‘குற்றவாளி’ பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு தண்டனை வழங்கக் கோரி எட்டு மாவட்டங்களில் தமிழ்ப் பெண்கள் வீதியில் இறங்கினர்!

Share

சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

27 மே 2026 அன்று புதன்கிழமை அன்று மட்டக்களப்பில் வடக்கு மற்றும் கிழக்கு பெண்கள் கூட்டினால் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவில், சமூக அந்தஸ்து, அரசியல் அதிகாரம் அல்லது மதத் தலைமை ஆகியவற்றின் அடிப்படையில் பாலியல் குற்றவாளிகள் பாதுகாக்கப்படக்கூடாது என போராட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.

“குறுகிய மதவாத சிந்தனையுடன் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வதையும் அனுமதிக்க முடியாது. அனைவரும் சட்டத்தின் முன் சமமானவர்கள். அந்த அடிப்படையில் யார் குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும். பாலியல் குற்றவாளிகளை சமூக அந்தஸ்து, அரசியல் அதிகாரம், மத தலைமைத்துவம் ஆகிய காரணங்களுக்காக பாதுகாக்க வேண்டாம். சட்ட ஆட்சியை முதன்மைப்படுத்தி பாலியல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குங்கள்,” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி மட்டக்களப்பில் நடைபெற்ற போராட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒரு தமிழ்ப் பெண்மணி, சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு, எதிர்காலத்தில் குற்றம் செய்ய நினைக்கும் எந்தவொரு மதகுருவுக்கோ அல்லது சாதாரண மனிதருக்கோ ‘ஒரு பாடமாக’ அமையும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

“இந்த சிறுமிக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு நீதியை கோரும்போது இந்த அரசு அதனை தட்டிக்கழிக்கக் கூடாது. அந்த பிக்குவிற்கு சரியான ஒரு தீர்ப்பை/தண்டனையை வழங்க வேண்டும். வழங்கப்படும் அந்த தண்டனையானது எதிர்காலத்தில் தவறிழைக்க நினைக்கும் ஒரு மத குருவுக்கு, ஒரு பொது மகனுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டுமென்பதே எங்களது கோரிக்கை.”

சிறுமி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது பிணையில் உள்ள அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வடக்கு மற்றும் கிழக்கு பெண்கள் கூட்டினால் மே 27 யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் கந்தசாமி கோவில் அருகே போராட்டம் நடத்தப்பட்டது.

அனுராதபுரம் பகுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சர்வ சாதாரணம் என குறித்த தேரருக்காக நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி மகேஷ் கொடுவெல்ல கூறிய கருத்தை, யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஒரு தமிழ்ப் பெண் கடுமையாக விமர்சித்திருந்தார்.

“இந்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி ஒருவர், அனுராதபுரம் பகுதிகளில் 10, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு இவ்வாறு நடப்பது என்பது கிராமப் பகுதிகளில், அந்த பகுதிகளில் சாதாரணம் என, சட்டத்தைப் பாதுகாத்து, சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்கப் போராடும் ஒரு வழக்கறிஞர், பொதுவாக இதுபோன்ற ஒரு கருத்தைக் கூறுவது – ஒரு ஜனநாயக நாட்டில், அரசியலமைப்புச் சட்டத்தால் சட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நாட்டில் – இந்த நாட்டின் ஜனநாயகம் எந்தளவிற்கு கேள்விக்குட்படுத்தப்படுகிறது என்பது, படித்த புத்திஜீவிகள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் அறிந்துள்ளனர். இத்தகைய சூழலில், இந்த சந்தேகநபருக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது என்பது, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகப் பேசக்கூடாது என்றாலும், இதுபோன்ற குற்றவாளிகள் ஒரு மத நிறுவனத்தின் பெயரால் பாதுகாக்கப்படுகிறார்களா என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது.”

சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் காவலில் வைக்கப்பட்டிருந்த பல்லேகம ஹேமரத்ன தேரரை, கடுமையான பிணை நிபந்தனைகளின் பேரில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதம நீதிபதி மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி சியபத் சசிந்து விக்ரமரத்ன அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.