“வெற்றித் தமிழகம்” தொலைநோக்கு திட்டங்கள் ஆளுனர் உரைக்கு வைகோ பாராட்டு தெரிவித்தார்
Share
“வெற்றித் தமிழகம்” அரசின் தொலைநோக்குப் திட்டங்கள் ஆளுனர் உரை மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது என வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டின் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுனர் உரையுடன் தொடங்கி இருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், புதிதாக அமைந்துள்ள ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல் திட்டங்களை எடுத்துக்காட்டியுள்ளார். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து பண பலத்தை முறியடித்துத் தமிழக வெற்றி கழகத்திற்கு பெரும் ஆதரவை தமிழக மக்கள் அளித்துள்ளனர் என்று ஆளுனர் சுட்டிக்காட்டி இருப்பது உண்மையே. மதசார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை, சிறுபான்மையினர் நலன், மீனவர் நலன், பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப சமத்துவம், சம தர்மக் கோட்பாடுகளை நிலை நிறுத்த புதிய அரசு உறுதியாக இருப்பதை ஆளுனர் உரையில் பிரகடனம் செய்திருப்பது நம்பிக்கை தருகிறது. மக்களாட்சியில் மக்களே மன்னர்கள் என்று உரைத்த பேரறிஞர் அண்ணாவின் மணிவாசகத்தைச் சுட்டிக்காட்டி இந்த அரசு மக்களுக்கான அரசு என்பதை ஆளுனர் உறுதி செய்திருக்கிறார். 2031 இல் இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதற்கு “வெற்றி தமிழகம்“என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கது. சமூக நீதியை நிலைநாட்டவும், தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான் நீடிக்கும் என்று அறுதியிட்டு கூறியிருப்பதும், மாநில உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுக்கவும், நதிநீர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழக வெற்றிக்கழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்று அழுத்தம் திருத்தமாக ஆளுனர் குறிப்பிட்டிருக்கிறார்.
















