வவுனியா மாநகர முன்னாள் மேயர் உள்ளிட்ட நால்வரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் கடுமையான உத்தரவு
Share
– செங்கோல், பதக்கம், முதல்வர் ஆடை காணாமல்போன விவகாரத்தில் நடவடிக்கை
வவுனியா மாநகர சபையின் முன்னாள் மேயர் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்ய வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம்.ஜே.எஸ். ரத்னமலல தெரிவித்தார்.
வவுனியா மாநகர சபைக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ செங்கோல், பதக்கம் மற்றும் மேயரின் ஆடை என்பன காணாமல்போயுள்ளன என்று மாநகர சபையின் செயலாளரினால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டுக்கமைய, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டுள்ள மூடிய சுற்றுக்காவல் கமரா காட்சிகளின் உதவியுடன் வவுனியா தலைமைப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில், இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் மேயர் உள்ளிட்ட சிலரைக் கைது செய்வதற்கான அனுமதியை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் கோரியிருந்தனர்.
பொலிஸாரின் இந்தக் கோரிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் குறித்து விரிவாக ஆராய்ந்த வவுனியா நீதிவான் நீதிமன்றம், வவுனியா மாநகர சபையின் முன்னாள் மேயர் சு. காண்டீபன் உட்பட நான்கு பேரைக் கைது செய்து, உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.















