ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
Share
ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களையும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுபோன்ற இரண்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், தற்போது 49 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால், அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யாமல், இலங்கை அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “முந்தைய ஆட்சிகளில் கடிதம் எழுதுவதோடு பணி முடிந்துவிட்டது. ஆனால், நமது அரசு அப்படி கிடையாது” என்று கூறிய முதல்வர் விஜய், தற்போது அதே பாணியில் கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்? மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகஸ்ட் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை வருகை தர உள்ள நிலையில், அவர் வருவதற்கு முன்பாகவே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த மீனவர் சமுதாயத்திற்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். எனவே ‘மீனவ நண்பன்” என்று வார்த்தைகளால் முதல்வர் விஜய் சொல்வதை காட்டிலும், செயலில் அதை நிரூபித்து மீனவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.”















